திருவண்ணாமலை ,ஜூன் 15 : திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே ஏரிக்கரைக்குச் சென்ற கர்ப்பிணிப் பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபரை பொதுமக்கள் முன்னிலையில் அந்தப் பெண் அடித்து உதைத்த சம்பவத்தைத் தொடர்ந்து ,காவல்துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைதான நபர் அரசியல் கட்சிப் பின்னணி கொண்டவரா என்ற விவாதம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
\

சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ரஞ்சிதா என்ற கர்ப்பிணிப் பெண் ,நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள தர்மராஜா கோயில் அருகேயுள்ள ஏரிக்கரைக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்றுள்ளார். அவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான யோகேஸ்வரன் என்ற வாலிபர் ,திடீரென அந்தப் பெண்ணின் அருகே சென்றுள்ளார். யாரும் எதிர்பாராத விதமாகத் தனது ஆடைகளைக் களைந்த யோகேஸ்வரன் ,ரஞ்சிதாவிடம் அநாகரிகமான முறையில் பேசி ,தனது இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்தி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரச் சீர்கேடு: ஊழியர்கள் அவதி
டாஸ்மாக்கில் கூடுதல் விலை: 20 நாட்களில் 200 ஊழியர்கள் சஸ்பெண்ட்
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ரஞ்சிதா ,அந்த வாலிபரின் அத்துமீறலைக் கண்டு அஞ்சாமல் துணிச்சலுடன் அவரைப் பிடித்து அடித்து துவைத்துள்ளார். தனது கர்ப்ப நிலையைக்கூடப் பொருட்படுத்தாமல் ,அந்த நபரைத் தடுத்து நிறுத்தி ,”உன் தாயிடம் இதுபோன்று நடந்து கொள்வாயா?” எனக் கேள்விக் கேட்டு பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பெண்ணின் இந்த ஆக்ரோஷமான எதிர்ப்பைக் கண்ட யோகேஸ்வரன் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ,பாதிக்கப்பட்ட ரஞ்சிதா சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ,உடனடியாக யோகேஸ்வரனைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ,யோகேஸ்வரன் கடந்த ஓராண்டு காலமாகவே அந்த ஏரிக்கரைப் பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்கவும் ,தனியாகவும் வரும் பெண்களைக் குறிவைத்து ,இது போன்ற சில்மிஷங்கள் மற்றும் அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து ,அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் ,அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் ,கைது செய்யப்பட்ட யோகேஸ்வரன் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் என்று உள்ளூர் வட்டாரங்களில் தகவல் பரவியது. எனினும் ,இந்தத் தகவலை தவெகவின் சேத்துப்பட்டு நகர நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். யோகேஸ்வரனுக்கும் தங்கள் கட்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ,தவெக மாவட்டச் செயலாளர் சத்யாவிற்கு அண்மையில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழாவின் போது ,யோகேஸ்வரன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இத்துடன் ,பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ரஞ்சிதா ,குற்றம் சாட்டப்பட்ட வாலிபரை ஏரிக்கரையில் வைத்து துணிச்சலுடன் அடித்து உதைக்கும் வீடியோ காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ,உள்ளூர் மக்களிடையே மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
இப்பகுதியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் ,குறிப்பாக ஏரிக்கரை போன்ற பொது இடங்களுக்குச் செல்லும் பெண்களுக்குத் தொல்லை கொடுப்பவர்கள் மீது காவல்துறை கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








