தஞ்சாவூர், ஜூன் 5: திருக்காட்டுப்பள்ளி அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வெண்ணாற்றின் குறுக்கே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் ரூ.29.85 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி – செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் விண்ணமங்கலம் கிராமப் பகுதியில் வெண்ணாற்றின் குறுக்கே தற்போது பழமையான குறுகிய பாலம் ஒன்று பயன்பாட்டில் உள்ளது.மிகவும் குறுகியதாக உள்ள இந்த பழைய பாலத்தில் ஒரு பேருந்து செல்லும்போது எதிர் திசையில் வரும் மற்றொரு பேருந்து அல்லது வாகனம் காத்திருந்துதான் செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.மேலும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் கனரக வாகனங்களின் தொடர் இயக்கத்தால் ஏற்படும் அதிர்வுகள் காரணமாக பழைய பாலம் நாளுக்கு நாள் வலுவிழந்து வந்தது.இதனால் தற்போதைய போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பழைய பாலத்திற்கு கிழக்குப் பகுதியில் புதிய உயர்மட்ட பாலம் ஒன்றை அமைத்துத் தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக ரூ.29.85 கோடி மதிப்பீட்டில் அரசாணை வெளியிடப்பட்டு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து ரூ.21.81 கோடி மதிப்பீட்டில் பால கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணிகள் வழங்கப்பட்டன.
Also read : 100% தேர்ச்சி பெற்ற 73 பள்ளிகளுக்கு பாராட்டு; மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய ஆட்சியர் உத்தரவு
நெல்லை களக்காடு அருகே போலி ஆவணம் மூலம் நில மோசடி: இருவர் மீது வழக்கு
நெல்லையில் ரூ.30 லட்சம் வீட்டு மனை மோசடி: 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு
புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த உயர்மட்ட பாலம் 265.20 மீட்டர் நீளமும், 12.00 மீட்டர் ஓடுதள அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.வெண்ணாற்றின் குறுக்கே இந்த பாலத்தை தாங்கி நிற்கும் வகையில் மொத்தம் 16 தூண்கள் அமைக்கப்பட உள்ளன.இதில் இரு தூண்களுக்கு இடைப்பட்ட நீளம் 15.60 மீட்டராக இருக்கும்படி திட்டமிடப்பட்டு அதற்கான அடித்தளப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்த பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.பணிகளை முழுமையாக முடித்து ஒப்படைக்க 12 மாதங்கள் ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி நடப்பு 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் பாலத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பொறியாளர்கள் கண்காணிப்பில் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த புதிய உயர்மட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் போது திருக்காட்டுப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், விவசாயிகளும் தங்களின் விளைபொருட்களை தடையின்றி சந்தைக்கு கொண்டு செல்ல இந்த பாலம் முழுமையாக பயனளிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








