மயிலாடுதுறை , June 7 : மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் ஓரவஞ்சனை செய்வதோடு, விவசாயிகளையும் வஞ்சித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜமால் முகமது யூனூஸ் (மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன் (பூம்புகார்), மு.செந்தில்செல்வன் (சீர்காழி) ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இதில் வேளாண்மைத்துறை, நகராட்சி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட இ-சேவை மையம், நில அளவை, சுகாதார நலப்பணிகள், பள்ளி கல்வித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைந்துள்ளதா, எந்தெந்த பணிகள் இன்னும் நிறைவடையாமல் நிலுவையில் உள்ளன மற்றும் நிறைவடைந்த பணிகளால் பயனடைந்த பொதுமக்களின் விவரங்கள் குறித்து அதிகாரிகள் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
Also Read : அண்ணாமலை அமித்ஷாவின் ஒரு மாய மான்: பெரியகுளத்தில் கி.வீரமணி விமர்சனம்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா, மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சி குறித்தும், மத்திய, மாநில அரசாங்கங்களின் திட்டங்கள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை கண்காணிக்கும் விதமாகவும் இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.ஒவ்வொரு திட்டத்தின் கீழும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, எவ்வளவு மக்கள் பயன்பெற்றுள்ளனர், திட்டத்திற்கான இலக்கீடு எவ்வளவு, அதில் தற்போது வரை எவ்வளவு இலக்கு எய்தப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்திற்குத் தரவேண்டிய நிதியை முழுமையாகத் தராமல் ஓரவஞ்சனை செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.குறிப்பாக, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பச்சைப்பயறு கொள்முதல் செய்வதற்காக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டிற்கு மிகக் குறைவான இலக்கையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகச் சாடிய அவர், இது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்றார்.இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மத்திய அரசுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்பி, விவசாயிகளிடமிருந்து பச்சைப்பயறை முழுமையாகக் கொள்முதல் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
மாவட்டத்தின் உட்கட்டமைப்பு மற்றும் ரயில்வே திட்டங்கள் குறித்துப் பேசிய எம்.பி.சுதா, மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பிறகுதான் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் சேவைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று விளக்கினார்.மேலும், தென்னலக்குடி – திருக்கடையூர் இடையே 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கக் கோரியிருந்த நிலையில், தற்போது அப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாகத் தெரிவித்தார்.
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குப் பிரதம மந்திரி நிவாரண நிதியிலிருந்து இதுவரை 3.50 கோடி ரூபாய் பெற்று வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாப்படுகை மற்றும் நீடூர் ரயில்வே கேட்டுகளில் மேம்பாலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறினார்.இதில் மாப்படுகை பகுதியில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கினை விரைந்து முடித்து பணிகளைத் தொடங்குவதற்கு ரயில்வே அமைச்சருக்கு முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தின் போது உள்ளாட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் உள்ள கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் மனுக்களை அளித்தனர்.இம்மாநாட்டிற்குரிய ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கோகுல், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பூங்கொடி, மயிலாடுதுறை நகராட்சித் தலைவர் செல்வராஜ், சீர்காழி நகராட்சித் தலைவர் துர்கா பரமேஸ்வரி உட்பட அனைத்துத் துறை அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.








