கோவை ,ஜூன் 5: நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 73 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி.ராமராவ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,சாதனை படைத்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்குப் பொன்னாடை அணிவித்து,வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரின் பங்களிப்பை ஆட்சியர் தனது உரையில் வெகுவாகப் பாராட்டினார்.

விழாவில் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர்,பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் முழுமையான தேர்ச்சியைப் பெறுவதுடன் ஆசிரியர்களின் பணி நிறைவடைந்து விடுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகள் அனைவரும் அடுத்த கட்டமாக மேல்நிலைக் கல்வியில் (பதினொன்றாம் வகுப்பு) தடையின்றிச் சேர்வதை அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
Also read : நெல்லை களக்காடு அருகே போலி ஆவணம் மூலம் நில மோசடி: இருவர் மீது வழக்கு
நெல்லையில் ரூ.30 லட்சம் வீட்டு மனை மோசடி: 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு
திருக்காட்டுப்பள்ளி அருகே வெண்ணாற்றின் குறுக்கே ரூ.29.85 கோடியில் புதிய உயர்மட்ட பாலம்: கட்டுமான பணிகள் தீவிரம்
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களது படிப்பைப் பாதியில் கைவிடுவதைத் தடுப்பதே கல்வித்துறையின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர்,மாணவர்கள் தாங்கள் பயின்ற அதே பள்ளியிலோ அல்லது தங்களுக்கு அருகாமையில் உள்ள பிற மேல்நிலைப் பள்ளிகளிலோ சேர்ந்துள்ளனரா என்பதைத் தலைமையாசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என உத்தரவிட்டார். மாணவர்களின் கல்வித் தொடர்ச்சியைத் துல்லியமாகக் கண்காணிப்பதன் மூலமாக மட்டுமே,மாவட்ட அளவில் பள்ளி இடைநிற்றலை முழுமையாக ஒழிக்க முடியும் என்றும்,கல்வித் தர மேம்பாட்டில் ஆசிரியர்களின் சமூகப் பொறுப்பு மிக முக்கியமானது என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
இந்தச் சிறப்புக் கூட்டத்தில் பொள்ளாச்சி,வால்பாறை,கிணத்துக்கடவு,சிங்காநல்லூர்,தொண்டாமுத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த 73 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பள்ளிக் கல்வித்துறையின் உயர் அதிகாரிகள்,வட்டாரக் கல்வி அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். பொதுத் தேர்வில் பின்தங்கிய மாணவர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கி,அவர்களைத் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களின் கூட்டு முயற்சிக்கு இக்கூட்டத்தில் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.








