நெல்லை, ஜூன் 5: நெல்லை மேலப்பாளையம் பகுதியில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனையை, போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியாக விற்பனை செய்ததாக பெண் உட்பட நான்கு பேர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மும்பை பாண்டுப் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி வேலாயுதம் (60).இவருடைய பூர்வீகம் நெல்லை மாவட்டமாகும்.இவருடைய கணவர் வேலாயுதம் கடந்த 1996ஆம் ஆண்டு நெல்லை மேலப்பாளையம் குலவணிகர்புரம் ஸ்ரீராம் நகர் பகுதியில் நிலம் வாங்கியிருந்தார்.பாளையங்கோட்டையைச் சேர்ந்த குருவம்மாள் மற்றும் குமுதா ஆகியோரிடமிருந்து, மொத்தம் 21 சென்ட் பரப்பளவிலான ஐந்து வீட்டு மனைகளை அவர் முறையாக கிரையம் பெற்றிருந்தார்.இந்த நிலையில், நிலத்தின் உரிமையாளரான வேலாயுதம் கடந்த 2005ஆம் ஆண்டு காலமானார்.கணவரின் மறைவுக்குப் பின், அந்த நிலத்தின் பராமரிப்பை லட்சுமி கவனித்து வந்தார்.
சமீபத்தில் லட்சுமி தனது பூர்வீக நிலத்தின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக, அந்த இடத்திற்கு வில்லங்கச் சான்று (EC) எடுத்துப் பார்த்துள்ளார்.அப்போது, தங்களுக்குச் சொந்தமான ஐந்து மனைகளில் ஒரு மனையை, நிலத்தை விற்ற குமுதா மற்றும் சிலர் திட்டமிட்டு சதி செய்து, வேறு ஒரு நபருக்கு விற்று மோசடி செய்திருப்பதை லட்சுமி கண்டறிந்து அதிர்ச்சியடைந்தார்.
நெல்லை களக்காடு அருகே போலி ஆவணம் மூலம் நில மோசடி: இருவர் மீது வழக்கு
கடந்த 1996ஆம் ஆண்டே வேலாயுதத்திற்கு விற்கப்பட்ட அதே நிலத்தில் உள்ள பிளாட் எண் 13 என்ற இடத்தை, குமுதா முறைகேடாக மீண்டும் விற்பனை செய்துள்ளார்.இந்த 3.98 சென்ட் பரப்பளவு கொண்ட இடத்தை, கடந்த 24-12-2001 அன்றே ஜவகர் என்பவருக்கு குமுதா மீண்டும் கிரையம் செய்து கொடுத்துள்ளார் என்பது வில்லங்கச் சான்று மூலம் தெரியவந்தது.இந்த போலி ஆவணத் தயாரிப்பு மற்றும் மோசடிப் பதிவில், குமுதாவின் கணவர் பாஸ்கரன் மற்றும் சங்கரன் ஆகியோர் சாட்சிகளாகக் கையெழுத்திட்டு உடந்தையாக இருந்துள்ளனர்.மோசடி செய்யப்பட்டுள்ள அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தனது கணவர் வாங்கிய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அத்தவறாக விற்பனை செய்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, லட்சுமி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் விரிவான புகார் மனு ஒன்றை அளித்தார்.புகாரைப் பரிசீலித்த கமிஷனர், இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
கமிஷனரின் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் இந்த மோசடி விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தார்.நிலத்தை மோசடியாக விற்ற குமுதா, நிலத்தை வாங்கிய ஜவகர், போலி ஆவணத்திற்கு சாட்சியாகக் கையெழுத்திட்ட பாஸ்கரன் மற்றும் சங்கரன் ஆகிய நான்கு பேர் மீதும் ஐபிசி 468 (ஏமாற்றும் நோக்கில் போலி ஆவணம் தயாரித்தல்) மற்றும் 471 (போலி ஆவணங்களை அசல் போல் பயன்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.தற்போது இந்த வழக்குத் தொடர்பாக மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காயத்ரி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.








