மதுரை, May 27 : தமிழகத்தில் ஆளுநர் பங்கேற்கும் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலித்து முறைப்படுத்தும் என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சூலப்புரம் கிராமத்தில் நேற்று இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையின் போது, மின்னல் தாக்கி மூன்று பெண்கள் உயிரிழந்தனர். சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கணபதியம்மாள், சூலப்புரத்தைச் சேர்ந்த ராமுத்தாய் மற்றும் தனிக்கொடி ஆகிய மூவரின் இல்லங்களுக்கும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் நேரில் சென்றார். அவருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா உள்ளிட்டோர் உடனிருந்தனர். உயிரிழந்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தலா 4 லட்சம் ரூபாய்க்கான நிவாரணக் காசோலைகளை உறவினர்களிடம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உடனடியாக தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், மின்னல் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மற்றொரு நபரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகக் கூறிய அவர், தற்போது அந்த நபர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் நிகழ்ந்த உடனே முதலமைச்சர் இது குறித்து விரிவாகக் கேட்டறிந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
Also Read : தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கு: சதித் திட்டத்தை நேரில் கேட்டதாக கூலித் தொழிலாளி பரபரப்பு சாட்சியம்
நிவாரணம் வழங்கச் சென்ற போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மூலம் அவை பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். படித்த இளைஞர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்குவது குறித்தும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்குத் தேவையான இதர உதவிகளைச் செய்வது குறித்தும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அவர் உறுதியளித்தார்.
முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்துப் பேசிய அமைச்சர், தமிழக முதல்வர் டெல்லியில் முன்வைத்துள்ள நான்கு முக்கிய கோரிக்கைகளில் முதன்மையானது தமிழ்த்தாய் வாழ்த்துச் சர்ச்சை குறித்தது என்றார். தமிழகத்தில் ஆளுநர் கலந்துகொள்ளும் சில நிகழ்வுகளில் முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடாமல் வந்தே மாதரம் பாடப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இது கண்டனத்திற்குரியது என்றார். மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தங்களுக்கு எப்போதெல்லாம் அரசியல் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இத்தகைய மாற்றங்களைச் செய்கிறார்கள் என்றும், தமிழகத்திலும் அது போன்ற சூழல் நடப்பதாகவும் விமர்சித்தார். ஆளுநர் மாளிகையாக இருந்தாலும் சரி, ஆளுநர் பங்கேற்கும் பிற நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதன்மையாகப் பாடப்பட வேண்டும் என்பதே தங்களின் பிரதான கோரிக்கை என்று வலியுறுத்திய அவர், இதற்குப் பிரதமரும் செவிசாய்த்து ஒன்றிய அரசு உரிய மாற்றங்களைக் கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். வந்தே மாதரம் பாடலை நிகழ்வின் இறுதியில் கூட பாடிக்கொள்ளலாம், ஆனால் முதலாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்தே ஒலிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக அவர் விவரித்தார்.
முதலமைச்சரின் இந்த டெல்லி பயணத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள் யாரும் உடன் செல்லாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கைகள் சார்ந்த பயணம் என்பதால் முதலமைச்சர் மட்டுமே சென்றுள்ளார் என்றும், அமைச்சர்கள் செல்லாதது அவர்களின் பணி சார்ந்தது என்றும் விளக்கமளித்தார்.
மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், கர்நாடக அரசு மேகதாது அணையைக்கட்ட விடாமல் தடுப்பதற்கான அனைத்து சட்டபூர்வமான வழிமுறைகளையும், தரவுகளையும் ஆராய்ந்து முதலமைச்சர் உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பார் என்றும், தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்படும் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
இறுதியாக, எதிர்க்கட்சிகள் மீதான மத்திய முகமைகளின் சோதனைகள் குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ஒன்றிய அரசு தங்களது அதிகாரத்தை எங்கு வற்புறுத்திச் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறதோ, அதையெல்லாம் தவறான அணுகுமுறை என்றே தங்களின் அரசு கருதுவதாகக் குறிப்பிட்டார். ஏதேனும் தவறு நடந்திருந்தால் அமலாக்கத்துறை தாராளமாகச் சோதனை நடத்தலாம் என்றும், ஆனால் எந்தத் தவறும் இல்லாத பட்சத்தில், தங்களுக்கு எதிராக இருக்கும் மாற்று அரசியல் கட்சி அரசு என்பதற்காக மட்டுமே மிரட்டும் தொனியில் இத்தகைய சோதனைகளில் ஈடுபடுவது தேவையற்ற ஒன்று என்றும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார்.








