நெல்லை,May 28: தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் கூடிச் சதித் திட்டம் தீட்டியதை தான் நேரில் கேட்டதாக, நெல்லை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி, இந்த வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி சோரீஸ்புரம் மடத்தூர் சாலையில் வழக்கறிஞர் முத்துக்குமாரின் தாயாருக்குச் சொந்தமான நகை அடகு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி முத்துக்குமார் அந்தக் கடையில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பல் அவரை கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்தது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இக்கொலைச் சம்பவம் தொடர்பாக, முத்துக்குமாரின் தம்பி ராம்குமார் (41) சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) மற்றும் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) ஆகியோர் முழுமையான விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களைத் தாக்கல் செய்தனர்.
Also Read : சிவகங்கையில் அதிர்ச்சி: போலி தங்க நகைகளை அடகு வைத்து கோடிகள் மோசடி?
இந்த கொலை வழக்கின் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதப்பட்டதால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் பொருட்டு, நெல்லை மத்திய சிறை வளாகத்தில் உள்ள பழைய தியேட்டர் பகுதியில் சிறப்பு நீதிமன்றம் தற்காலிகமாக அமைக்கப்பட்டது. இங்கு தூத்துக்குடி மாவட்ட பிசிஆர் (PCR) நீதிமன்றத்தின் சார்பில் தினசரி அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை தற்பொழுது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 நபர்களும் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, கண்ணாடி தடுப்புகளால் அமைக்கப்பட்ட தனி அறையில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் அமர வைக்கப்பட்டு விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்தச் சூழலில், இவ்வழக்கின் அரசு தரப்பு 14-வது சாட்சியாக, கொத்தனார் கையாள் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளியான முருகேஷ் (30) என்பவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். நீதிமன்றத்தில் அவர் அளித்த சாட்சியத்தில், கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் கோரம்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலைக்குச் சென்றிருந்ததாகக் குறிப்பிட்டார். அந்தச் சமயத்தில், இவ்வழக்கில் தொடர்புடைய ஜெயபிரகாஷ், ரமேஷ் மற்றும் முருகேசன் ஆகிய மூன்று நபர்களும், வழக்கறிஞர் முத்துக்குமாரைக் கொலை செய்வது குறித்து தங்களுக்குள் மிக ரகசியமாகச் சதித் திட்டம் தீட்டிப் பேசிக் கொண்டிருந்ததை தான் மறைந்திருந்து கவனித்ததாகத் தெரிவித்தார்.
மேலும் தனது சாட்சியத்தில், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சுமார் 4 அல்லது 5 நாட்கள் கழித்து தான் வழக்கறிஞர் முத்துக்குமாரை நேரில் சந்தித்து, அவரது உயிருக்கு இருக்கும் ஆபத்து குறித்து எச்சரித்ததாகவும் முருகேஷ் கூறினார். எனினும், அதன்பின் 5 மாதங்கள் கழித்து நாளிதழ்களைப் பார்த்தபோதுதான், வழக்கறிஞர் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் செய்தி தனக்குத் தெரியவந்ததாகக் குறிப்பிட்ட அவர், உடனடியாக முத்துக்குமாரின் தம்பி ராம்குமாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவரது வழிகாட்டுதலின்படி சிப்காட் காவல் நிலையம் சென்று, காவல் துணை கண்காணிப்பாளரிடம் தான் நேரில் கேட்ட அனைத்து விபரங்களையும் வாக்குமூலமாகப் பதிவு செய்ததாகவும் நீதிமன்றத்தில் விவரித்தார்.
முருகேஷின் இந்த முக்கிய சாட்சியத்தைத் தொடர்ந்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சாட்சி முருகேஷிடம் மிகத் தீவிரமான குறுக்கு விசாரணையை மேற்கொண்டனர். முருகேஷ் மீது ஏற்கனவே காவல்துறை வசம் உள்ள பல்வேறு வழக்குகள் குறித்தும், அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறித்தும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அவரது நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க முயன்றனர். அதற்குப் பதிலளித்த முருகேஷ், தன் மீது காவல்துறை தரப்பில் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்று மறுப்புத் தெரிவித்தார். நீண்ட நேரம் நீடித்த இந்தத் தீவிர குறுக்கு விசாரணைக்குப் பிறகு, நீதிபதி சாட்சி முருகேஷின் வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவு செய்து விசாரணையை முடித்து வைத்தார்.







