திருநெல்வேலி , ஜூன் 22: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதை முன்னிட்டு, நெல்லை மாநகரில் தனியார் பேருந்து ஒன்று இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்களுக்கு இலவச சேவையை வழங்கி வருகிறது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை ஒட்டி, அக்கட்சியின் தொண்டர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாநகரில் ‘வேணி’ என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் பேருந்து நிறுவனம், முதல்வரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று ஒரு நாள் முழுவதும் அந்தப் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் கட்டணம் முழுமையாக விலக்களிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எந்தப் பேருந்து நிறுத்தத்தில் வேண்டுமானாலும் ஏறி தங்களது இலக்கு வரை கட்டணமின்றி இலவசமாகப் பயணித்துக் கொள்ளலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெல்லை – பெற்றோர் இல்லை; வீடு கோரி ஆட்சியரிடம் 12ம் வகுப்பு மாணவி மனு
பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த இலவச சேவை குறித்த அறிவிப்பு போஸ்டர்களாக அச்சிடப்பட்டு அந்தப் பேருந்தின் முன்புறமும் பின்புறமும் ஒட்டப்பட்டுள்ளன. தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு தனியார் பேருந்து நிறுவனம் எடுத்துள்ள இந்தத் தனித்துவமான முயற்சி தற்போதைய சூழலில் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக பணிக்குச் செல்வோர் மற்றும் அன்றாடப் பயணிகள் பலரும் இந்தச் சேவையைப் பாராட்டிப் பயன்படுத்தி வருகின்றனர்.





