நெல்லை , ஜூன் 23: நெல்லை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வு தளத்தில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஒருவருக்குக் கூட ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்த புதிய கடினமான நடைமுறை தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக பத்து மாவட்டங்களில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் மனிதத் தலையீடு இல்லாத அதிநவீன கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் இயங்கும் தானியங்கி ஓட்டுநர் தேர்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இந்த நவீன தளம் அண்மையில் செயல்பாட்டுக்கு வந்தது. இத்திட்டத்தின்படி இருசக்கர வாகனங்களுக்கு ‘8’ வடிவிலும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ‘H’ வடிவிலும் தேர்வுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்பு இந்தத் தேர்வின் போது விண்ணப்பதாரர்கள் செய்யும் தவறுகளை அங்கிருக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேரடியாகக் கண்காணித்து முடிவுகளை அறிவித்தனர். ஆனால் தற்போதைய புதிய முறையில் வாகனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையை விட்டுச் சற்றே விலகினாலும் அங்கிருக்கும் சென்சார்கள் தானாகவே கட்டுப்பாட்டு அறைக்குச் சமிக்ஞை அனுப்பி விண்ணப்பதாரரைத் தகுதி நீக்கம் செய்துவிடுகின்றன. தேர்வின் போது தவறுகளைச் சரி செய்ய இரண்டு முறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இறந்தவர் பெயரில் போலி ஆவணம்: நெல்லையில் அதிர்ச்சி நில மோசடி!
இந்த புதிய தேர்வுப் பாதைகள் மிகவும் குறுகலாகவும் அடுத்தடுத்து கடினமான திருப்பங்களைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருப்பதே தற்போதைய குளறுபடிகளுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தேர்வு தளம் தொடங்கப்பட்ட இரண்டு நாட்களில் ஒரு விண்ணப்பதாரர் கூட தேர்ச்சி பெற முடியாத அசாதாரண சூழல் நிலவுகிறது.
இது குறித்து திருநெல்வேலி ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த தானியங்கி தளத்தின் முதற்கட்டப் பணிகள் நடக்கும் போதே இதில் உள்ள குறைபாடுகளை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகக் குறிப்பிட்டனர். புதிய மாணவர்களுக்கு ஆரம்பத்திலேயே இவ்வளவு கடினமான நடைமுறையை அமல்படுத்தினால் அவர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று சுட்டிக்காட்டியும் அதிகாரிகள் தரப்பில் தங்கள் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
நேற்று நடைபெற்ற சோதனை ஓட்டத்தின் போது இதில் உள்ள ஆபத்தான திருப்பங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவித்த நிர்வாகிகள், பொதுவாக மூன்று மீட்டர் அகலமுள்ள ஒரு வாகனம் திரும்புவதற்கு குறைந்தது நான்கு மீட்டர் அகலமாவது தேவைப்படும் என்றும் ஆனால் இங்கு வளைவின் அகலம் மூன்றரை மீட்டராக மட்டுமே குறைத்து வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். இந்த வளைவில் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களே வாகனத்தை இயக்குவது மிகக் கடினம் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
இந்தியா முழுவதும் ஒரே நிறுவனம் தான் இந்தத் தானியங்கி தேர்வு தளங்களை அமைத்துள்ளது. பிற மாநிலங்களில் போதிய இடவசதியுடன் பரந்த அளவில் இந்தத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் வெறும் 5 சென்ட் நிலப்பரப்பிற்குள் குறுகிய அளவில் ஏன் அமைக்கப்பட்டது என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.
தாங்கள் இந்த நவீன தொழில்நுட்ப முறைக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அனைத்து தரப்பினரும் வாகனங்களை இயக்கும் வகையில் தளம் எளிதாக இருக்க வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என்றும் நிர்வாகிகள் தெளிவுபடுத்தினர். நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இந்தத் தளத்தினால் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என்றும் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாத இந்தத் தளத்திற்குத் தங்களின் மாணவர்களை அனுப்பத் தயாராக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு பழைய தேர்வுத் தளத்தை மீண்டும் ஆய்வு செய்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





