நெல்லை , May 27: புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதுடன், கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்ட நபர் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி விபத்து ஏற்படுத்தியதாக மின்வாரிய ஊழியர் மீது தொடரப்பட்ட வழக்கை திருநெல்வேலி நீதிமன்றம் தீவிரமாக விசாரித்து வருகிறது.
திருநெல்வேலி பழையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரபாண்டியன். இவருடைய மனைவி மீனா. தங்களது புதிய வீட்டிற்கு மின் இணைப்புப் பெறுவதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டில் மின்வாரிய ஊழியரான அருணன் என்பவரை இவர்கள் அணுகியுள்ளனர். அப்போது, மின் இணைப்புப் பெறுவதற்குக் கட்டாயமாகத் தடையின்மை சான்று (NOC) பெற வேண்டும் என்று கூறி, அதற்கான செலவு என்ற பெயரில் அருணன் 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும், மின் இணைப்பு வழங்காமல் அவர் பாஸ்கரபாண்டியன் குடும்பத்தாரை அலைக்கழித்து ஏமாற்றி வந்துள்ளார்.
Also Read : கவர்னர் நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து முதன்மை பெற வேண்டும் – நிர்மல்குமார்
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மின்வாரியத்தின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து இதுகுறித்து விரிவான புகார் அளித்தனர். உயர் அதிகாரிகளின் தலையீட்டையும், உத்தரவையும் அடுத்து கடந்த 2024ஆம் ஆண்டு ஒருவழியாக இவர்களது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், மின் இணைப்பு கிடைத்ததே தவிர, அருணன் தருவதாகக் கூறிய தடையின்மை சான்றும் வழங்கப்படவில்லை; அதற்காகப் பெறப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணமும் திருப்பித் தரப்படவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த பாஸ்கரபாண்டியன், தடையின்மை சான்றையும் தாங்கள் கொடுத்த பணத்தையும் திரும்பக் கேட்பதற்காகச் சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர் அருணனை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருணன், பணத்தைத் திருப்பித் தராமல் தனது மோட்டார் சைக்கிளைக் கொண்டு பாஸ்கரபாண்டியன் மீது திட்டமிட்டு மோதி, அவரை கீழே இடித்துத் தள்ளிவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பியோடியதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாஸ்கரபாண்டியன் உடனடியாக மீட்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார்.
இந்தத் தாக்குதல் மற்றும் பண மோசடிச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பாஸ்கரபாண்டியன் தரப்பில் பேட்டை காவல் நிலையத்திலும், மின்வாரிய உயர் அதிகாரிகளிடமும் முறைப்படி புகார்கள் அளிக்கப்பட்டன. எனினும், காவல் துறை மற்றும் துறை ரீதியாக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மீனாவின் தரப்பில் நெல்லை நீதிமன்றத்தில் மின்வாரிய ஊழியருக்கு எதிராக நேரடியாக வழக்குத் தொடரப்பட்டது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், “மின் இணைப்பு மற்றும் தடையின்மை சான்று வழங்குவதாகக் கூறி எங்களை ஏமாற்றித் தான் 50 ஆயிரம் ரூபாயைப் பெற்றுள்ளார்கள். எனவே, எங்களை ஏமாற்றியவர்களிடமிருந்து உரிய தடையின்மை சான்றையும், எங்களிடம் சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தையும் முழுமையாகத் திருப்பிப் பெற்றுத்தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் லஞ்சப் புகார் குறித்து நெல்லை 4வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 10 மாதங்களாகத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. புகாரின் உண்மைத்தன்மை குறித்தும், சம்பவம் நடந்த விதம் குறித்தும் முதல்கட்ட விசாரணைகள் நிறைவடைந்து வழக்கு அடுத்தடுத்த கட்டங்களை எட்டியுள்ளது. இந்த நிலையில், இந்த லஞ்ச மற்றும் தாக்குதல் வழக்குக் குறித்த அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி புதன்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








