திருநெல்வேலி , சென்னை 28 : திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) உந்துவிசை வளாக புதிய இயக்குநராக நாராயணன் அப்பு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த வளாகத்தின் இணை இயக்குநராகவும், சிறப்பு விஞ்ஞானியாகவும் பணியாற்றி வரும் அவர், வரும் ஜூலை 1-ம் தேதி முதல் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்கவுள்ளார். தற்போதைய இயக்குநர் ஜே. ஆசீர் பாக்கியராஜ் ஜூன் 30-ம் தேதியுடன் பணி நிறைவு பெற்று ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இஸ்ரோ நிர்வாகம் இந்த புதிய நியமனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாராயணன் அப்பு சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) துறையில் பட்டம் பெற்றவர். விண்வெளித் துறையில் உள்ள ஆர்வம் காரணமாக கடந்த 1989-ம் ஆண்டு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் தனது அறிவியல் பணியைத் தொடங்கினார். இஸ்ரோவின் மிக முக்கியமான மைல்கல்லான கிரையோஜெனிக் ராக்கெட் உந்துவிசை தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளில் (Cryogenic rocket propulsion technology) ஆரம்பம் முதலே இவர் மிக முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்களுக்கு மகேந்திரகிரி உந்துவிசை வளாகம் (ஐ.பி.ஆர்.சி.) ஒரு முதுகெலும்பாகத் திகழ்கிறது. குறிப்பாக இங்கு தற்போது அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் இயந்திர சோதனை மையம் (ஐ.சி.இ.டி.) விண்வெளி ஆய்வுகளில் அடுத்தகட்டப் பாய்ச்சலாகக் கருதப்படுகிறது. இந்த மையம் வரும் 2026 டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்தத் திட்டம் தங்கு தடையின்றி நிறைவேறுவது மிக அவசியமாகிறது.
Also :அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு – மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வழக்கறிஞர் நோட்டீஸ்
இதனைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் இயந்திர சோதனை மையத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் வரை மகேந்திரகிரி வளாகத்தின் இயக்குநர் பொறுப்புடன் சேர்த்து ஐ.சி.இ.டி. திட்ட இயக்குநர் பொறுப்பையும் நாராயணன் அப்பு கூடுதலாகக் கவனிப்பார் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளித் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த புலமையும் கொண்ட ஒரு மூத்த விஞ்ஞானி இந்த முக்கியப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகேந்திரகிரி வளாகத்தின் அடுத்தகட்ட உந்துவிசை திட்டங்களுக்குப் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.





