சென்னை , ஜூன் 26: சென்னையில் வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாடு நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் திட்டமிடப்பட்டுள்ள இந்த உயர்மட்டக் கூட்டத்தில் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

மாநாட்டின் முதல் நாளான ஜூன் 29 அன்று ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்து பங்கேற்கும் கூட்டுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த முதல் அமர்வில் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்ட ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளார். குறிப்பாக மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது மற்றும் அதன் செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
Also : “அநாகரீகத்தின் உச்சம்!” – CPI பெ. சண்முகம் குறித்து முரசொலி எழுதியதற்கு ராஜ்மோகன் கொந்தளிப்பு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இந்த அமர்வில் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன. அத்துடன் ரவுடிசத்தை முழுமையாக ஒழிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. தற்போது பிணையில் வெளியில் இருக்கும் ரவுடிகளைக் கண்காணித்து அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாதவாறு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாகத் தடுப்பதற்கான தொடர் உத்திகள் குறித்தும் இந்த முதல் நாள் கூட்டத்தில் இறுதி செய்யப்படவுள்ளது.
காவல்துறையை நவீனமயமாக்குதல் மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவது குறித்தும் முதல் நாள் அமர்வில் ஆலோசிக்கப்பட உள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அதிகாரிகள் தொய்வின்றிச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை முதலமைச்சர் இந்த அமர்வில் வலியுறுத்த உள்ளார்.
மாநாட்டின் இரண்டாம் நாளான ஜூன் 30 அன்று ஐஏஎஸ் அதிகாரிகளுடனான தனிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த அமர்வில் தமிழகத்தின் தற்போதைய குடிநீர் தேவைகள் மற்றும் அதற்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்கிறார். மேலும் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு மற்றும் புதிய கட்டிடப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
அரசு அறிவித்துள்ள பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை விரைவாக பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார். பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளுக்குத் தேவையான நிலங்களை விரைவாகக் கையகப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை உடனடியாக மீட்டுத் துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் இந்த அமர்வில் விவாதிக்கப்பட உள்ளது.
அரசுப் பணிகளில் வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் வருவாய் அலுவலகங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு எவ்வித லஞ்சமும் இன்றித் தேவையான சேவைகளைத் தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்வது குறித்தும் முதலமைச்சர் இந்த மாநாட்டில் அதிகாரிகளுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளார்.
அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடைவதை உறுதி செய்ய மின் ஆளுமை (E-Governance) முறையை முழுமையாகப் பயன்படுத்துவது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பல்வேறு அரசு அலுவலகங்களில் காத்திருக்காமல் இணையதளம் மூலமாகவே விரைவாகப் பெறும் புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது குறித்து விவாதித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் விரைவாகக் கொண்டு சேர்ப்பதோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை மிகச் சிறந்த முறையில் பராமரிப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் உத்திகளையும் வகுக்கும் நோக்கில் இந்த இரண்டு நாள் மாநாடு அமையவுள்ளது.





