ஆன்மாக்களுக்கு கல்யாணம்..! கர்நாடகாவில் விருந்து வைத்து கொண்டாடப்பட்ட வினோத பிரேத திருமணம்

கர்நாடகா , ஜூன் 26: வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாகக் கருதப்படும் திருமண சடங்குகள் மனிதர்களின் வாழ்வை முழுமையாக்குவதாக நம்பப்படுகிறது. ஆனால் மரணமடைந்த தங்களின் பிள்ளைகளுக்காகப் பெற்றோர்கள் ஒன்றுசேர்ந்து நடத்தும் ஒரு வினோத திருமண சடங்கு, கர்நாடக மாநிலத்தில் தற்போதும் பாரம்பரியமாகத் தொடர்கிறது.

image 358

இள வயதிலேயே அல்லது குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்தவர்களின் ஆன்மாக்களை சாந்திப்படுத்துவதற்காக அவர்களுக்குரிய திருமண வயதை எட்டும்போது இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது. உடல் அளவில் தங்களை விட்டுப் பிரிந்தாலும் மனதளவில் தங்களோடு வாழும் பிள்ளைகளின் ஆன்மாவிற்குத் திருமணம் செய்து வைக்கும் இந்த வழக்கம் சீனா, கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தகைய சடங்கு பிரேத கல்யாணம் என்று அழைக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் அருகே உள்ள மூண்டூர் கிராமத்தில் அண்மையில் ஒரு வினோத திருமணம் நடைபெற்றுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சரோஜா மற்றும் ஆனந்த் ஆகிய இருவரது பிள்ளைகளும் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக சிறு வயதிலேயே உயிரிழந்துவிட்டனர். தற்போது அவர்களுக்குரிய திருமண வயது வந்துவிட்டதாகக் கருதிய பெற்றோர்கள் பாரம்பரிய வழக்கப்படி இரு ஆன்மாக்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

மணமகனே இல்லாமல் திருமணம் நடத்தும் கிராமம்… ‘மணமகன்’ வேடம் ஏற்கும் சகோதரி – இந்தியாவில் அதிர்ச்சியூட்டும் பழக்கம்

ஆந்திரா கோணசீமாவில் தவளைகளுக்கு தங்கத் தாலி கட்டி வினோத திருமணம்

இயல்பான திருமணத்தைப் போலவே இதற்கும் இருதரப்பு பெற்றோர்களும் முன்னதாகவே ஜாதகம் பார்த்து, நல்ல நாள் குறித்து, நிச்சயதார்த்தம் மற்றும் பெண்ணழைப்பு உள்ளிட்ட அனைத்து சடங்குகளையும் முறைப்படி திட்டமிட்டனர். இந்தத் திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் நேரடியாக இல்லை என்றாலும் அவர்களுக்குப் பதிலாக களிமண்ணால் செய்யப்பட்ட உருவங்கள் அல்லது அவர்களின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன. மணமகனுக்கு வேட்டி, சட்டை மற்றும் மணமகளுக்குப் பட்டுப்புடவை என பாரம்பரிய உடைகள் அணிவிக்கப்பட்டு மணமேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து, மணமகன் சார்பில் தாலி கட்டுதல், மணமக்கள் கைகோர்த்து அக்னியை வலம் வரும் சப்தபதி சடங்கு மற்றும் தந்தையால் மணமகளை ஒப்படைக்கும் கன்னியாதானம் உள்ளிட்ட அனைத்து முக்கிய திருமண சடங்குகளும் அர்ச்சகர்களின் முன்னிலையில் முறைப்படி நடத்தப்பட்டன.

திருமண சடங்குகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வருகை தந்த உறவினர்களுக்குத் தடபுடலான திருமண விருந்து உபசரிக்கப்பட்டது. எனினும், இந்த வினோத சடங்கில் சில முக்கிய கட்டுப்பாடுகளும் பின்பற்றப்படுகின்றன. இந்த ஆன்மாக்களின் திருமண நிகழ்வில் சிறுவர்களோ அல்லது திருமணமாகாதவர்களோ கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை. குடும்பத்தின் பெரியவர்கள் மட்டுமே இதில் முழுமையாகப் பங்கேற்கின்றனர். திருமணம் முடிந்த பின்னர் களிமண்ணால் செய்யப்பட்ட அந்த மணமக்களின் உருவங்கள் முறைப்படி நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன அல்லது உரிய விதிகளின்படி அடக்கம் செய்யப்படுகின்றன.

வெளிநாட்டினருக்கும் மற்றவர்களுக்கும் இந்தச் சடங்கு வியப்பாகவும் விசித்திரமாகவும் தோன்றினாலும் உயிரிழந்த தங்களின் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து பார்த்துவிட்டதாகப் பெற்றோர்கள் இதன் மூலம் மன அமைதி அடைகின்றனர். இத்தகைய சடங்குகளை முறைப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும் என்பதும் குடும்பத்திற்கு மகிழ்ச்சி பெருகும் என்பதும் இப்பகுதி மக்களின் தலைமுறை நம்பிக்கையாக உள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *