நெல்லை , ஜூலை 2: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியதற்கான காரணங்களையும், ஆளும் திமுக அரசு மீது தனக்கு இருந்த ஒட்டுமொத்த குமுறல்களையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருநெல்வேலியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மிகவும் ஆவேசமாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பில், திமுகவின் செயல்பாடுகளைக் கடுமையாக சாடியவர், தமிழகத்தின் அடுத்ததும் முதலமைச்சராக விஜய்தான் வருவார் என்றும் அதிரடியாகக் கணித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முதலமைச்சரின் இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு வந்தால் மதிமுக பிரச்சாரம் செய்யும் என்று தான் கூறியதாகத் தொடர்ந்து பழிசுமத்துகிறார்கள் என்று வேதனை தெரிவித்தார். இது குறித்து வைகோ கூறுகையில், “நேரம் வரும்போது அதைப்பற்றி பரிசீலனை செய்கிறேன் என்றுதான் முதலமைச்சர் கூறினார். ஆனால் திமுகவினர் திட்டமிட்டு என் மீது அபாண்டமான, ஆக்கிரமமான பழிகளைச் சுமத்தி வருகிறார்கள். திமுக குடும்பம் தொடர்பான ஒரு பத்திரிகை என் மீது சேற்றை வாரி வீசி, பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்களை எப்போதும் அதிகம் மதிக்கக் கூடியவன் நான். என் மீது வீசப்படும் இந்த பழிச்சொற்கள் எதுவும் பலிக்காது” என்றார்.
கூட்டணியில் நீடித்தபோது மதிமுக சந்தித்த தர்மசங்கடங்களை விவரித்த அவர், “திமுக எங்களை எல்லாரையும் விட மிகவும் மோசமாக நடத்தினார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு வெறும் நான்கு சீட் மட்டும்தான் தர வேண்டும் என திமுக எங்களை நிர்பந்தித்தது. மதிமுகவின் இரண்டு எம்எல்ஏக்களும் கண்டிப்பாக உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்று திமுக கட்டாயப்படுத்தியது. திமுக தலைவர் ஸ்டாலின் முதலில் எங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட சரி என்றுதான் ஓகே சொன்னார். ஆனால் அதன் பிறகு அமைச்சர்கள் பிடிவாதம் பிடித்து, எங்களை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்தார்கள். இதையெல்லாம் தாங்கிக் கொண்டு, சகித்துக் கொண்டுதான் கூட்டணியில் இருந்தோம். கூட்டணியில் இருக்கும்போதே இதைப்பற்றி ஏன் பேசவில்லை என்று இப்போது சிலர் கேட்கிறார்கள். அப்போது பேசியிருந்தால் அடுத்த நாளே எங்களை வெளியேற்றியிருப்பார்கள். இனி ஒரு நாள் கூட அங்கு நீடிக்கக் கூடாது என்று நினைத்துதான் சுயமரியாதையோடு வெளியேறும் நிலை ஏற்பட்டது. எங்களுடைய பொதுக்குழு உறுப்பினர்கள் எடுத்த ஒருமனதான முடிவின்படிதான் திமுகவில் இருந்து வெளியேறினோம்” என்று விளக்கினார்.
திமுக முன்வைக்கும் குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைகோ, “அரசியலில் குதிரை பேரம் என்ற இழிவான வேலையை தமிழ்நாட்டில் முதலில் ஆரம்பித்து வைத்ததே திமுகதான். எங்களுடைய கம்பம் தொகுதி எம்எல்ஏவை ராஜினாமா செய்ய வைத்து, அவரை திமுகவில் சேர்த்து, இடைத்தேர்தலில் நிற்க வைத்தது பெருச்சாளி பேரமா? திமுகவிலிருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறியதற்கும் ஒரு வலுவான காரணம் இருக்கிறது. என்ன காரணம் என்பது அந்தந்த கட்சிகளுக்குத்தான் தெரியும். அதைப்பற்றி நான் பேசுவது நன்றாக இருக்காது. அவர்கள் என் முதுகில் குத்தவில்லை; நெஞ்சிலேயே குத்திவிட்டார்கள். நெஞ்சில் குத்திய பிறகும் எங்களிடம் உயிர் இருக்கிறது. இந்த கட்சிக்காக உயிரைக் கொடுத்தவர்கள் இன்னும் தயாராக இருக்கிறார்கள். வரவிருக்கும் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போவதில்லை” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
பாளையங்கோட்டை சிறை வாசலில் கைதி தப்பி ஓட்டம்… 2 போலீசார் சஸ்பெண்டு, 4 தனிப்படை தீவிர வேட்டை!
மேலும், 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத ஒரு மிகப்பெரிய அரசியல் மோசடி இப்போது நடந்துள்ளது. அதிமுக – திமுக கூட்டணி திட்டமிட்டு இருந்தது இப்போது வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது. கூடவே இருந்து கொண்டே குழிபறிக்கும் வேலையைச் செய்தார்கள். அதிமுகவுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டதில் திமுகவுக்கு என்ன ஆதாயம், எதற்காக இதற்கு ஒப்புக்கொண்டார்கள் என்பது இப்போதும் ஒரு மில்லியன் டாலர் கேள்வியாகவே நீடிக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவி வழங்க வெளியில் இருந்து எப்படி ஆதரவு கொடுப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
திமுகவில் தான் 29 ஆண்டுகள் பாடுபட்டதையும், திமுக தலைவருக்காக 25 முறை சிறைக்குச் சென்றதையும் நினைவுகூர்ந்த வைகோ, ஊழல் கோபுரமாக இருக்கும் திமுக வைக்கும் கடுமையான விமர்சனங்களை மக்கள் யாரும் இனி கண்டுகொள்ள மாட்டார்கள் என்றார்.
விஜய் தலைமையிலான தற்போதைய அரசு குறித்துப் பேசிய வைகோ, “விமானத்தில் என்னுடன் பயணித்த நபர் ஒருவர், இப்போது அரசுத் துறைகளில் லைசென்ஸ் வாங்க 10 பைசா கூட லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அந்த அளவுக்கு கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் இல்லாத ஊழலற்ற ஆட்சியை விஜய் கொடுத்து வருகிறார். ஒரு அமைதியான ஜனநாயகப் புரட்சியை அவர் தமிழகத்தில் நிகழ்த்தியுள்ளார். சமூக நீதி, மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவத்தில் உறுதியாக இருக்கும் விஜய் அரசுக்கு மதிமுக எப்போதும் பக்கபலமாக இருக்கும். இந்த அரசு வெற்றி முரசு கொட்டும் அரசாக நீடிக்கும். அடுத்த தேர்தலிலும் விஜய்தான் முதலமைச்சராக ஆவார். ஐந்து ஆண்டுகளில் அவரே முதலமைச்சராக நீடிப்பார்” என்று உறுதியாகக் கூறினார்.
இளைஞர்களின் ஆதரவு குறித்துப் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் இப்போது விஜய் பக்கம்தான் ஆதரவாக இருக்கிறார்கள். குறிப்பாக 15, 17 வயதுடைய இளம்தலைமுறையினர் விஜய் மீது அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே, அடுத்த தேர்தலில் விஜய் தலைமையிலான அணி 35 முதல் 45 சதவீத வாக்குகளைப் பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். திமுகவிடம் எங்களுக்கு ஏற்பட்ட கசப்பான நிலைமை, விஜய்யுடன் இருக்கும்போது கண்டிப்பாக ஏற்படாது” என்றார்.
தனது புத்தக வெளியீட்டு விழா குறித்துப் பகிர்ந்த வைகோ, “என் நாடாளுமன்ற ஆங்கில உரைகளைத் தொகுத்து, எனது மகன் ராஜா வையாமூர்த்தி ஒரு புத்தகமாக உருவாக்கியுள்ளார். இதன் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவிலும் முதலமைச்சர் விஜய் பங்கேற்க இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் பல்வேறு வடிவங்களில் வர முயற்சிப்பதை எதிர்த்து நடக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரணி குறித்தும் வைகோ சுட்டிக்காட்டினார். முன்னாள் நீதிபதிகள் மற்றும் முன்னாள் காவல் அதிகாரிகளைக் கொண்டு 15 நாட்கள் விரிவாக ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட 2000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சுற்றுச்சூழலைக் காக்கவே இந்தச் சுற்றுப்பயணம் என்றும், இதில் சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல இயக்கங்கள் பங்கேற்பதாகவும் தனது பேட்டியில் தெரிவித்தார்.





