பாளையங்கோட்டை சிறை வாசலில் கைதி தப்பி ஓட்டம்… 2 போலீசார் சஸ்பெண்டு, 4 தனிப்படை தீவிர வேட்டை!

நெல்லை , ஜூலை 2: நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைவாசல் அருகே போலீசாரை ஏமாற்றிவிட்டு, ரவுடி பட்டியலில் உள்ள கைதி தப்பியோடிய விவகாரத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டு தலைமை காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய கைதியை பிடிப்பதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, டிரோன் கேமராக்கள் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவருடைய 22 வயது மகன் ஆறுமுகக்கனி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தாழையூத்து காவல் துறையினர் இவரை ரவுடி பட்டியலில் சேர்த்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழையூத்து பகுதியில் நடந்த ஒரு திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஆறுமுகக்கனிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணையில் ஆஜராகாமல் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததால், நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த ஆறுமுகக்கனியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கோவையில் பதுங்கியிருந்த அவரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, நேற்று காலையில் தாழையூத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு தாழையூத்து காவல் நிலைய தலைமை காவலர்களான மல்லிகை ராஜ் மற்றும் பார்வதி ஆகிய இருவர், ஆறுமுகக்கனியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் அடைப்பதற்காக ஆட்டோவில் அழைத்து வந்துள்ளனர்.

Also : “திமுக தலைவருக்காக 25 முறை சிறை சென்றேன்… ஆனால் குதிரை பேர அரசியலை தொடங்கியது திமுகதான்” – வைகோ பரபரப்பு பேச்சு

ஆட்டோ பாளையங்கோட்டை மத்திய சிறையின் பிரதான நுழைவு வாயில் அருகே வந்து நின்றது. கைதியை சிறைக்குள் அழைத்துச் செல்வதற்காக, அவரது கையில் பூட்டப்பட்டிருந்த கைவிலங்கை போலீசார் அகற்றியுள்ளனர். அந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆறுமுகக்கனி, கண் இமைக்கும் நேரத்தில் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த தலைமை காவலர்கள் அவரைப் பிடிக்க முயன்றும் அதற்குள் அவர் இருள் சூழ்ந்த பகுதிக்குள் மறைந்தார்.

கைதி தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட மற்றும் மாநகர காவல் துறையினருக்கு உடனடியாக அவசரத் தகவல் கொடுக்கப்பட்டு, ஒட்டுமொத்த போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். நெல்லை புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் உடனடியாகத் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். மேலும் பாளையங்கோட்டை சிறை அருகே உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் ஆறுமுகக்கனி தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதி என்பதால், இரவு நேரத்தில் டிரோன் கேமராக்களைப் பறக்கவிட்டு, வெப்ப உணர் கருவிகள் மூலம் கைதியைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். எனினும் முதல் கட்டத் தேடுதலில் அவர் எங்கும் தென்படவில்லை.

இந்தத் துணிகரத் தப்பியோட்டம் குறித்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவின் பேரில், ஆய்வாளர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர்கள் அருண் ராஜா, சுமன் ஆகியோர் தலைமையில் நான்கு தனிப்படைகள் உடனடியாக மாற்றி அமைக்கப்பட்டு, ரவுடி ஆறுமுகக்கனியைப் பிடிக்கப் பல்வேறு திசைகளில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், விசாரணைக் கைதியை மத்திய சிறைக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் அஜாக்கிரதையாகவும், பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமலும் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பாதுகாப்புப் பணியில் இருந்த தாழையூத்து காவல் நிலைய தலைமை காவலர்கள் மல்லிகைராஜ் மற்றும் பார்வதி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா. சாஸ்திரி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சிறை வாசலிலேயே கைதி தப்பிய இச்சம்பவம் நெல்லை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *