திருநெல்வேலி , ஜூலை 1 : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு முடக்க நினைப்பதாகக் கூறி ஜூலை 1-ஆம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய சாலை மறியல் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய பாஜக அரசு 100 நாள் வேலை திட்டத்தை படிப்படியாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்தை முழுமையாகப் பாதுகாக்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டக் குழு சார்பில் இன்று கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் திரண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் முயற்சிகளை உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
ALso : நெல்லை நில மோசடி: ஆர்.டி.ஓ விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்த 2 பேர் கைது!
விதிமுறைகளின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை நேரத்தை தற்போதைய 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்பது இவர்களின் முதன்மையான கோரிக்கையாக இருந்தது. உடல் ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் தங்களுக்கு முழு நேர வேலை என்பது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதால் வேலை நேரக் குறைப்பு தங்களின் வாழ்வாதார உரிமை என போராட்டக் களத்தில் சங்க நிர்வாகிகள் சுட்டிக்காட்டினர்.
முக்கிய சந்திப்பு பகுதியான வண்ணாரப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் திரண்டு திடீர் மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகர காவல்துறையினர், சாலையில் அமர்ந்திருந்த போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் கோரிக்கைகள் குறித்து உறுதியான கவனம் செலுத்தப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்தைச் சீர்செய்யும் பொருட்டு மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த அதிரடி கைதைத் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை பகுதியில் போக்குவரத்து மீண்டும் சீரமைக்கப்பட்டது.





