சென்னை , ஜூலை 1: தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் என். இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசிய விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மூன்று பேர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு நபர்களைக் கரூரில் வைத்துச் சென்னை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையரிடம் தவெக எம்எல்ஏ இளையராஜா கடந்த திங்கள்கிழமை புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘இந்தியன் பொலிட்டிக்கல் டெமோக்ரடிக் ஸ்ட்ரேட்டஜிஸ்’ (IPDS) என்ற பெயரில் கருத்துக்கணிப்பு மற்றும் அரசியல் ஆலோசன நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு என்பவர் தன்னைத் தொலைபேசியில் அணுகியதாகக் குறிப்பிட்டிருந்தார். சட்டமன்றத்தில் பேரவைத் தலைவருக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கோரி தமக்கு 35 கோடி ரூபாய் வரை தருவதாகப் பேரம் பேசியதாகவும், அதற்குத் தாம் மறுப்பு தெரிவித்தபோது தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இளையராஜா தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் திருவில்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாகச் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய மூன்று பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் திருவில்லிக்கேணி போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் இந்தச் சதியின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் குறித்த தகவல்கள் வெளியாயின. இதனையடுத்து சென்னை நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் கரூருக்கு விரைந்தனர். அங்கு மறைந்திருந்த அதிபன் ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய மேலும் இரண்டு நபர்களை இன்று அதிரடியாகக் கைது செய்தனர். கைதான இருவரிடமும் கரூரிலேயே வைத்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே முன்னதாகக் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகிய மூன்று பேரும் பலத்த பாதுகாப்புடன் சென்னை எழும்பூர் நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். விசாரணையைத் தொடர்ந்து அவர்களுக்கு நீதிமன்றக் காவல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுமார் 10-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் தலா 35 கோடி ரூபாய் வீதம் பேரம் பேசி குதிரை பேரத்தில் ஈடுபட இவர்கள் திட்டமிட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற முயற்சி மற்றும் மிரட்டல் விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதல் இருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே நரேஷ் என்பவரைச் சென்னையில் சந்தித்துப் பேசிவிட்டு, எம்எல்ஏ இளையராஜாவுக்குத் திருநாவுக்கரசு போன் செய்ததாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
இதன் காரணமாக வழக்கில் கூடுதல் நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா மற்றும் வேறு எந்தெந்த சட்டமன்ற உறுப்பினர்களிடம் இவர்கள் பேரம் பேச முயன்றார்கள் என்பது போன்ற விவரங்களைச் சேகரிக்கக் காவல் துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.





