சென்னை , ஜூன் 24: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் 50 சதவீத காலிப்பணியிடங்களை சீரமைக்கும் நோக்கில் நடப்பு நிதியாண்டிற்குள் ஒரே கட்டமாக 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் மின்வாரியத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 புதிய பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு புதிய அலுவலர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
விழாவில் வரவேற்புரையாற்றிய கூடுதல் தலைமைச் செயலாளரும் மின்வாரியத் தலைவருமான டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி மூலம் தகுதிபெற்ற 401 புதிய அலுவலர்களின் வருகையானது அவர்களின் வாழ்வாதாரத் தொடக்கம் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மின்சாரத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்குமான ஒரு வலுவான முதலீடாகும் என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் விளக்க உரையாற்றிய எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மின்சாரத் துறைக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முதலமைச்சர் தலைமையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். மின்சார வாரியத்தில் தற்போது 50 சதவீதத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதால் அன்றாடப் பணிகளைக் கையாள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் இந்த ஆண்டில் மட்டும் 15,000 பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நிலவுவது குறித்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த முதலமைச்சர் விஜய் கோரிக்கையை பரிசீலித்து அடுத்த 30 நிமிடங்களிலேயே 15,000 பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவதற்கான ஒப்புதலை வழங்கினார் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் திமுக ஆட்சி டெண்டர் ரத்து: தவெக அரசு அதிரடி மாற்றம்
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரத் துறையில் தேங்கிக்கிடக்கும் கட்டமைப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தகுந்த தருணம் இதுவே என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் தற்போதைய மின் விநியோகக் கொள்ளளவைச் சீராகக் கையாளுவதற்கே கூடுதலாக 250 முதல் 300 துணை மின் நிலையங்கள் (சப்-ஸ்டேஷன்ஸ்) தேவைப்படுகின்றன என்றார். மேலும் மாநிலத்தில் பயன்பாட்டில் உள்ள சுமார் 4 லட்சம் மின்மாற்றிகளில் (டிரான்ஸ்பார்மர்கள்) 20 முதல் 25 சதவீதத்திற்கும் அதிகமானவை 20 ஆண்டுகள் பழமையானவை என்பதால் அவற்றை முழுமையாகப் புதுப்பிக்க வேண்டிய கட்டாயமும் அரசுக்கு உள்ளதாகத் தெரிவித்தார். இத்தகைய சூழலில் போதிய மனிதவளம் இல்லாமல் துறையை மேம்படுத்த முடியாது என்பதால் மின்வாரிய வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரே ஆண்டில் இத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அவர் விளக்கினார்.
புதிய அரசு பொறுப்பேற்ற நான்கு வாரங்களுக்குள் தேர்வு செய்யப்பட்ட 401 அலுவலர்களுக்கான அனைத்துப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு ஒரே வாரத்தில் இந்த விழா ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. புதிய பணியாளர்கள் அனைவருக்கும் முதலமைச்சரே நேரில் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று விரும்பி இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார் என்று குறிப்பிட்ட அமைச்சர் இந்த அரசு மக்களின் தேவைகளுக்கும் பொதுமக்களின் நலனுக்கும் மட்டுமே முன்னுரிமை அளித்துச் செயல்படும் என்றும் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் பெயரளவிற்கு இல்லாமல் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.
மின்சார வாரியத்தை நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதுமையான முறையில் மாற்றி அமைப்பதற்கான வேலைகள் முழு வீச்சில் தொடங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் புதிதாகப் பணியில் இணையும் அலுவலர்கள் துறையின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மின்சார வாரியத்தின் பல்வேறு பிரிவுகளின் மேலாண்மை இயக்குநர்கள் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.





