நெல்லை , ஜூன் 22:நெல்லை மாவட்ட விவசாயிகள் தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிசான சாகுபடி நெல்லுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தக்கல் முறை மின் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயப் பணிகள் பிரதானமாக உள்ள நிலையில் கடந்த பிசான பருவ சாகுபடியின் போது விவசாயிகள் விளைவித்த நெல் மூடைகள் அரசு கொள்முதல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு நெல் வழங்கி சுமார் 120 நாட்களைக் கடந்தும் அதற்கான கொள்முதல் தொகை இதுவரை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
நெல்லை – பெற்றோர் இல்லை; வீடு கோரி ஆட்சியரிடம் 12ம் வகுப்பு மாணவி மனு
இந்தச் சூழலில் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரியும் விவசாயிகளின் மற்ற அவசரத் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஒன்றிணைந்து இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்க நிர்வாகி மூவி சுந்தர், சுரேஷ் கோபால், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் நெல்லை மாவட்ட செயலாளர் ஆபிரகாம், மற்றும் மணிமுத்தாறு பிரதான கால்வாய் இரண்டாவது ரீச் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் வேலையா உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நெல்லை எம்ஜிஆர் சிலை அருகில் ஒன்று திரண்டனர்.
அங்கிருந்து தங்களது கோரிக்கைகளை முழங்கியபடி பேரணியாகப் புறப்பட்ட விவசாயிகள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை வந்தடைந்து அங்கு திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து விவசாய சங்கங்களின் முக்கியப் பிரதிநிதிகள் மட்டும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் தமிழ்நாடு முழுவதும் தக்கல் முறையில் மின் இணைப்புப் பெறுவதற்காக விவசாயிகள் தலா இரண்டரை லட்சம் ரூபாய் வீதம் பணம் செலுத்தி ஆறு மாதங்கள் கடந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்தியும் இதுவரை விவசாயக் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளதால், சாகுபடிப் பணிகளைத் தொடர முடியாமல் தவித்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மின் இணைப்புக்காகப் பலரிடம் கடன் வாங்கிய தொகையையும் வட்டியையும் கூட கட்ட முடியாமல் தங்களது வாழ்வாதாரம் முடங்கியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன்கள் அனைத்தையும், தமிழக வெற்றிக்கழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வலுவாக முன்வைத்துள்ளனர். பயிர் கடன் தள்ளுபடியில் எவ்வித நிபந்தனைகளோ அல்லது குறிப்பிட்ட வரம்புகளோ விதிக்கக் கூடாது என்றும் தகுதியுடைய அனைத்து விவசாயிகளின் கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான தொகையை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் மாவட்டம் தழுவிய அளவில் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் விவசாயிகள் தங்களது மனுவில் எச்சரித்துள்ளனர்





