சிறப்பு செய்தி தொகுப்பு , ஜூன் 18 : தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலைமை மற்றும் கடன் சுமை குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட துறையில் நிலவும் நெருக்கடிகள், அதற்கான மூல காரணங்கள் என்ன என்பதை விரிவாக ஆராய்ந்து பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதற்காக வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமே வெள்ளை அறிக்கை ஆகும். ஒரு குறிப்பிட்ட தலைப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுவெளியில் வெளிப்படையாக வைப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். வெள்ளை அறிக்கை என்பது ஒரு விளக்க ஆவணமாக மட்டுமே செயல்படுவதால், இதில் எவ்வித பரிந்துறைகளும் வழங்கப்படாது. அத்துடன், இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயமும் அரசாங்கத்திற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக 2001 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசும் , பின்னர் 2021 ஆம் ஆண்டில் திமுக அரசும் மாநிலத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டிருந்தன. அந்த வரிசையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் நிதி நெருக்கடியை வெளிச்சம் போட்டுக் காட்டும் பல்வேறு முக்கிய மற்றும் அதிர்ச்சியளிக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ALso Read : தமிழக நிதிநிலை குறித்து வெளியான வெள்ளை அறிக்கை: 8 முக்கியக் குறியீடுகளில் கடைசி இடத்தில் தமிழ்நாடு!
பொருளாதார நெருக்கடியில் தமிழகம்: வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்
குறிப்பாக, கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் நேரடிப் பொதுக் கடன் 5.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் , தற்போது வெளியாகியுள்ள 2025-26 ஆம் ஆண்டுக்கான கணக்குகளின்படி இந்த நேரடிக் கடன் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மாநில அரசின் நேரடிக் கடன் சுமை சுமார் 4.87 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது. மாநில அரசின் இந்த நேரடிப் பொதுக் கடன் மட்டுமின்றி , அரசின் உத்தரவாதக் கடன்கள் , பொதுத்துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகள் மற்றும் இதர நிதிச் சார்ந்த கடன்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாகக் கணக்கிடும்போது, தமிழ்நாட்டின் மொத்தக் கடன் சுமை 13.18 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என்று இந்த வெள்ளை அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடுகையில் , கடனுக்கும் மொத்த மாநில உற்பத்தி மதிப்புக்குமான விகிதம் (Debt to GSDP ratio) கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் 28.7 சதவீதமாக இருந்தது. இது தற்போது 2025-26 ஆம் நிதியாண்டில் 28.3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விகிதம் சற்றே குறைந்திருப்பது போல் தோன்றினாலும் , இந்தியாவின் பிற முக்கிய தொழில்வள மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகமாகும். உதாரணமாக , கடனுக்கும் உற்பத்தி மதிப்புக்குமான விகிதம் குஜராத்தில் 17.6 சதவீதமாகவும், மகாராஷ்டிராவில் 19.7 சதவீதமாகவும் , அண்டை மாநிலமான கர்நாடகாவில் 23.4 சதவீதமாகவும் உள்ள நிலையில், தமிழகத்தின் விகிதம் 28.3 சதவீதமாக உயர்ந்து நிற்பது கவலைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்தக் கடன் சுமை மாநிலத்தின் தனிநபர் மீதான சுமையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் தமிழகத்தின் தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்க்கும்போது , தனிநபர் ஒருவரின் மீது சராசரியாக 28,934 ரூபாய் கடன் பொறுப்பு நிலுவையில் உள்ளது. கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தத் தனிநபர் கடன் பொறுப்பு வெறும் 6,787 ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில் , தற்போது அது 28,934 ரூபாயாகப் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது , கடந்த ஐந்து ஆண்டு கால இடைவெளியில் தமிழகத்தில் வசிக்கும் ஒரு நபருக்கான கடன் சுமை மட்டும் 22,147 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மாநிலத்தின் வருவாய் வரவுகளைக் கொண்டு அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிதி நெருக்கடி நிலையே வருவாய் பற்றாக்குறை என அழைக்கப்படுகிறது. இந்த வருவாய் பற்றாக்குறையானது கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் 46,538 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் , தற்போதைய 2025-26 ஆம் நிதியாண்டில் இந்த வருவாய் பற்றாக்குறை 78,324 கோடி ரூபாயாக மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. அரசின் அன்றாட நிர்வாகச் செலவுகள் , அரசு ஊழியர்களுக்கான ஊதியம் , ஓய்வூதிய பலன்கள் , வாங்கிய கடன்களுக்கான வட்டிச் செலவுகள் மற்றும் பொதுமக்களுக்கான சமூகநலத் திட்டங்களுக்கான செலவினங்கள் ஆகியவை மாநில அரசுக்குக் கிடைக்கும் வருவாயை விட அதிகமாக இருப்பதே இந்த வருவாய் பற்றாக்குறை அதிகரிப்புக்கு முதன்மையான காரணம் என்று வெள்ளை அறிக்கையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








