நெல்லை , ஜூன் 18 : நெல்லை அருகே பஸ் மோதிய விபத்தில் தையல் தொழிலாளி பலியான சம்பவத்தில் , அவரது குடும்பத்தினருக்கு ரூ.43 லட்சத்து 81 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு நெல்லை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த 51 வயதுடைய முருகன் என்பவரது மனைவி செல்லம்மாள் (45). தையல் தொழிலாளியான இவர், கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது கணவர் முருகனுடன் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி – நெல்லை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். இவர்களது பைக் நெல்லை எப்சிஐ ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தபோது , பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்களது பைக் மீது பலமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் கணவன் , மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த செல்லம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து , விபத்தில் உயிரிழந்த தனது மனைவியின் மரணத்திற்கும் , தனக்கு ஏற்பட்ட படுகாயங்களுக்கும் உரிய இழப்பீடு கோரி முருகன் நெல்லை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முருகனுடன் சேர்ந்து அவருடைய மகன் நடராஜன் (25) மற்றும் மகள் சங்கீதா (22) ஆகியோரும் மனுதாரர்களாக இணைந்தனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து காப்பீடு செய்யப்பட்டிருந்த இப்கோ டோக்கியோ இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நெல்லை மோட்டார் வாகன விபத்து விபத்து நீதிமன்ற சிறப்பு நீதிபதி பிரஸ்னேவ் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் , காவல்துறையினரின் விசாரணை அறிக்கையையும் விரிவாகப் பரிசீலித்தார்.
விசாரணையின் முடிவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பிரஸ்னேவ் , விபத்தில் உயிரிழந்த செல்லம்மாளின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.43 லட்சத்து 81 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த கணவர் முருகனுக்கு தனியாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இந்த மொத்த இழப்பீட்டுத் தொகையையும் , விபத்து ஏற்பட்ட நாள் முதல் கணக்கிடப்படும் 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து , தீர்ப்பு வெளியான 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் மனுதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கெடு விதித்துள்ளார்








