விஜய்க்கு அடுத்தபடியாக ஆதவ் அர்ஜுனாவா? – ADMK அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சர்ச்சை பேச்சு

திருவண்ணாமலை, மே 29 : “தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தொண்டர்களோ, பலமோ, ஆட்களோ இல்லையா? குதிரை பேரத்தின் மூலமாகத்தான் அக்கட்சி தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறதா?” என்று அதிமுக சட்டமன்ற கொரடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

image 572

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஆகியோர் தொடர்ந்து தவெக-வில் இணைந்து வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்து வருவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மக்களுக்குத் தூய ஆட்சி தருவோம் என்று தவெக தலைவர் விஜய் கூறிய நிலையில், தற்போது தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? திமுக, விசிக, அதிமுக எனப் பல்வேறு கட்சிகளில் இருந்த ஆதவ் அர்ஜுனா, தற்போது தனது அமைச்சர் பதவியைப் பயன்படுத்திக் கொண்டு குதிரை பேரத்தில் ஈடுபட்டு அனைவரையும் இழுத்து வருகிறார். இதே நிலை நீடித்தால், விரைவில் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மனு அளிப்போம்.

also read : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘TET’ தேர்வு கட்டாயம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கக் குதிரை பேரம் நடத்தியதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். திமுகவிற்கு எதிராகவே உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. எங்களின் உயிர் இருக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் நடக்கவே நடக்காது. இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய இயக்கமாக விளங்கும் அதிமுகவைப் பற்றிப் பேசுவதை ஆதவ் அர்ஜுனா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தண்ணீரும் எண்ணெயும் எப்போதும் இணையாது. இது போன்ற கூட்டணிக் குறித்து எடப்பாடி பழனிசாமி எந்த நேரத்திலும் பேசவில்லை.

மக்களைத் திசைதிருப்பும் தவறான கருத்துக்களை அவர்கள் கூறி வருகிறார்கள். தவெக-வில் விஜய்க்கு அடுத்தபடியாக ஆனந்தா அல்லது ஆதவ் அர்ஜுனாவா என்ற புகைச்சலும், மோதலும் தற்பொழுது அக்கட்சியினுள்ளேயே நிலவி வருகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அறையிலேயே மாற்றுக் கட்சியினரைத் தவெக-வில் இணைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் அது தலைமைச் செயலகமா அல்லது தவெக கட்சி அலுவலகமா என்பதில் பொதுமக்கள், நடுநிலையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தூய ஆட்சி தருவதாகக் கூறிய விஜய், உடனடியாகத் தலையிட்டு இதுபோன்ற தவறுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

யார் வெற்றி பெற்று தவறான அரசியல் செய்தாலும் அது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும். தங்கள் கட்சியில் ஆட்கள் இல்லை என்றால், நேர்மையான முறையில் மக்களைச் சந்தித்துத் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சேர்க்க வேண்டுமே தவிர, தொடர்ந்து அதிமுகவை ஓயாமல் குறை சொல்லக் கூடாது. அதிமுகவிலிருந்து உதிர்ந்த ரோமங்களுக்கு இணையானவர்கள் தான் தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் எக்காலத்திலும் அழியாது.

அதிமுகவிற்கு மாற்றாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுக்குமா என்று கேட்கிறார்கள்; அதற்குப் பதில் கூற ஆதவ் அர்ஜுனா என்ன கடவுளா? நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 எம்.எல்.ஏ-க்களைப் பெற்ற அவர்கள், தங்களைத் தக்கவைத்துக் கொள்ளக் குதிரை பேரம் நடத்தி வருகிறார்கள். மாறி மாறி ராஜினாமாக்கள் செய்வது என்பது தான் தற்போதைய நிதர்சனமான உண்மை. தமிழ்நாட்டு மக்கள் இதனை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள், உரிய நேரத்தில் சரியான பதிலடியைத் தருவார்கள்.

தனிப்பட்ட பதவி ஆசைக்காகத்தான் சிலர் தற்பொழுது கட்சி மாறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையான தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியைப் பொதுச்செயலாளராக நிரந்தரமாக ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் அணிவகுத்து நிற்கிறோம். அதிமுகவில் எந்தவொரு சலசலப்பும் இல்லை. சி.வி.சண்முகம் குறித்த கேள்விக்கு அவர்தான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும், அவர் தற்பொழுது வரை அதிமுகவில்தான் உள்ளார். சி.வி.விஜயபாஸ்கரும் கட்சியில் நல்ல நிலைப்பாட்டை எடுப்பார் என்று நம்புகிறேன். அதிமுகவில் உழைப்பிற்கு எப்பொழுதுமே உரிய அங்கீகாரமும் உரிமையும் கிடைக்கும். சிறு சிறு கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்றவர்கள் கூட மீண்டும் தற்பொழுது கட்சியில் இணைந்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் மட்டும் இருபதற்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் கஞ்சா நடமாட்டம் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தவெக நிர்வாகிகள் இந்த அவலங்களைத் தடுத்து நிறுத்த அரசை வலியுறுத்த வேண்டுமே தவிர, அதிமுகவைப் பற்றி தேவையின்றி விமர்சிப்பதைக் கைவிட வேண்டும். பொதுமக்களுக்குச் சேவை செய்யும் பணியில் ஈடுபட்டு, அதன் மூலமாகத் தங்கள் கட்சியை வளர்க்கப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனையை முழுமையாகத் தடை செய்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால், அதே லாட்டரித் தொழிலில் சம்பாதித்துவிட்டு, தற்பொழுது கட்சியில் கொடிகட்டிப் பறப்பவர் தான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் தான் தமிழக வெற்றிக் கழகம். மக்களுக்குச் சேவை செய்யும் அரசாகத் தமிழக அரசு செயல்பட வேண்டும். விஜய் தனக்குக் கீழ் இருக்கும் நபர்களின் செயல்பாடுகளைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அவர்களை உடனடியாகத் திருத்த வேண்டும்” என்று அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எச்சரித்தார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1043

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »