மேகதாதுவில் பூமி பூஜை நடத்த முயன்றால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு: அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை

சென்னை, மே 29: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காகப் பூமி பூஜை நடத்த கர்நாடக அரசு முயன்றால், அதற்கு எதிராகத் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) தமிழக அரசு வழக்குத் தொடரும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.ஆர். நிர்மல் குமார் எச்சரித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக இரு மாநிலங்களுக்கு இடையே தேவையின்றிப் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் மகிளா நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர், மேகதாது விவகாரம் மற்றும் நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அரசின் நிலைப்பாட்டை விளக்கினார்.

image 573

மேகதாது அணை விவகாரம் தொடர்பாகப் பேசிய அமைச்சர், “மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. திட்ட அறிக்கை தாக்கல் செய்ய மட்டுமே அனுமதி உள்ள நிலையில், அதனை மீறி அந்தப் பகுதியில் பூமி பூஜை நடத்தப்போவதாகக் கர்நாடக அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவை மீறி அவர்கள் பூமி பூஜை செய்ய முயன்றால், அதனைத் தடுப்பதற்காகத் தமிழக அரசு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்படும். இது தவிர, ஒவ்வொரு கட்டத்திலும் சட்ட ரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தேவைப்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்திலும் தகுந்த வழக்குகள் தொடரப்படும்” என்றார்.

Also Read : விஜய்க்கு அடுத்தபடியாக ஆதவ் அர்ஜுனாவா? – ADMK அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சர்ச்சை பேச்சு

மேலும், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்த அவர், “துணை முதலமைச்சராக இருப்பவரோ அல்லது முதலமைச்சராக இருப்பவரோ, யாராக இருந்தாலும் சட்டப்பூர்வமாக மட்டுமே செயல்பட முடியும். அணை கட்டக் கூடாது என்று ஏற்கனவே உத்தரவுகள் உள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் தன்னிச்சையாகப் பூமி பூஜை போன்ற பணிகளைச் செய்ய முடியாது. அரசியல் காரணங்களுக்காகவும் சுய லாபத்திற்காகவும் டி.கே. சிவகுமார் இது போன்ற கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அவரது இத்தகைய செயல்பாடுகள் கடுமையான கண்டனத்திற்குரியவை” என்று குறிப்பிட்டார்.

இரு மாநிலங்களுக்கு இடையேயான சுமுக உறவு மற்றும் அமைதியின் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்புவதை கர்நாடக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார். “தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே தொழில் ரீதியாகவும், மக்கள் வாழ்வாதார ரீதியாகவும் நெருங்கிய உறவுகள் உள்ளன. இரு மாநில மக்களிடையேயும், எல்லைப் பகுதிகளிலும் அமைதி நிலவுவது மிக முக்கியம். ஆனால், அரசியல் காரணங்களுக்காக இந்தச் சர்ச்சையை சிவகுமார் கிளப்பி விடுகிறார். மாநிலங்களுக்கு இடையேயான கொள்கைகளும் (Inter-State Policies), அதனைக் கண்காணிக்க நீதிமன்றங்களும் உள்ளன. அவற்றை மதிக்காமல், பொறுப்புணர்வற்ற முறையில் தன்னிச்சையாகச் செயல்படுவதை முதலமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாகச் சட்டப்பூர்வமாக என்ன செய்ய வேண்டும் என்பதை முதலில் முதலமைச்சர் முடிவு செய்வார். அதன் பின்னர், தேவைப்படும் பட்சத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விரிவாக விளக்கினார்.

தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கை மற்றும் புதிய மத்திய அரசு அமைந்துள்ள சூழலில் தமிழக அரசின் முயற்சிகள் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “மாநிலத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் (Lower Courts) தமிழ் வழக்காடு மொழியாகப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை, அங்கு தமிழிலேயே நடைமுறைகள் தடையின்றிப் பின்தொடரப்பட்டு வருகின்றன. அதேபோல், உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதற்கோ (Argument) அல்லது முறையிடுவதற்கோ இதுவரை எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை, தற்போதும் பல வழக்கறிஞர்கள் தமிழிலேயே வாதாடி வருகிறார்கள். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, அது தொடர்ந்து நீடிக்கும்” என்று தெளிவுபடுத்தினார்.

மேலும், உயர் நீதிமன்றத்தில் தமிழ் முழுமையான வழக்காடு மொழியாக மாறுவது தொடர்பான கொள்கை முடிவுகள் குறித்துப் பேசிய அவர், “மத்தியில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சருடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பது, நீதிமன்ற நடவடிக்கைகளை அமைதியான முறையில் கொண்டு செல்வது மற்றும் பொதுமக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் சாதகமான சாத்தியக்கூறுகளை உருவாக்குவது ஆகியவையே முதன்மை நோக்கமாகும். உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் என எந்த இடமாக இருந்தாலும் சரி, அங்கு அமைதியான சூழலும், சட்டப்படியான சாத்தியக்கூறுகளும் இருக்க வேண்டும். இது தொடர்பாக அரசு தரப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டு, வழக்கறிஞர்கள் விரைவாகவும் சுமுகமாகவும் பணியாற்றுவதற்கான வழிகாட்டுதல்கள் முறைப்படி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1043

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »