திருநெல்வேலி , ஜூன் 10 : நெல்லை சிபிசிஐடி போலீசாரால் பதிவு செய்யப்பட்ட மோதல் வழக்கில், வி.வி. மினரல்ஸ் நிறுவனத் தலைவர் எஸ். வைகுண்டராஜன் உள்ளிட்ட 5 பேர் நெல்லை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத 3 பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, வைகுண்டராஜன் உள்ளிட்ட 5 பேரும் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

வி.வி. மினரல்ஸ் நிறுவன அதிபர் வைகுண்டராஜன் தரப்பினருக்கும், அவரது நெருங்கிய உறவினர்களுக்கும் இடையே தொழில் மற்றும் குடும்ப ரீதியாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர் பகை காரணமாக, கடந்த 2022-ஆம் ஆண்டில் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடக்கத்தில் வார்த்தைப் போராகத் தொடங்கிய இந்த விவாதம், ஒரு கட்டத்தில் எல்லையை மீறி இரு தரப்பினருக்கும் இடையேயான நேரடி கைகலப்பாகவும், பெரும் மோதலாகவும் உருவெடுத்தது. இந்த மோதல் சம்பவத்தின் போது, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டதாகவும், சேதப்படுத்தப்பட்டதாகவும் பரஸ்பர புகார்கள் எழுந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, வழக்கின் தீவிரத்தன்மை கருதி விசாரணை நெல்லை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
also : சிவகங்கையில் தவெக பிரமுகர் கொலை செய்யப்பட்ட பார் மீண்டும் திறப்பதாக தகவல்: கிராம மக்கள் முற்றுகை
சிபிசிஐடி போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு, சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு இடையூறு விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல், வழிமறித்து காயம் ஏற்படுத்துதல் மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் வி.வி. மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜன், கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், முத்துசாமி, ராபர்ட் கிங்ஷ்லின், ராதாகிருஷ்ணன், மணிகண்ட பிரபு, ஹுபர்ட் ராஜ், பிரபாகர் ஆகிய 9 பேர் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டனர். போலீசார் தங்களது முழுமையான புலனாய்விற்குப் பிறகு நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.
இந்தச் சூழலில் இந்த வழக்கின் மீதான விசாரணை நெல்லை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக, இந்த வழக்கில் இரண்டாவது நபராகச் சேர்க்கப்பட்டிருந்த கிருஷ்ணமூர்த்தி தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, கிருஷ்ணமூர்த்தியை வழக்கிலிருந்து விடுவித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கீழ் நீதிமன்ற குற்றப்பத்திரிகையிலிருந்து அவரது பெயர் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைகுண்டராஜன், கண்ணன், முத்துசாமி, மணிகண்ட பிரபு, பிரபாகர் ஆகிய 5 பேரும் நீதிபதி முன்னிலையில் நேரில் ஆஜராகினர். ஆனால், இதே வழக்கில் தொடர்புடைய ராபர்ட் கிங்ஷ்லின், ராதாகிருஷ்ணன், ஹுபர்ட் ராஜ் ஆகிய மூவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பில் ஆஜராகாததற்கான முறையான காரணங்களும் சமர்ப்பிக்கப்படாததால் அதிருப்தி அடைந்த நீதிபதி, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ராபர்ட் கிங்ஷ்லின், ராதாகிருஷ்ணன், ஹுபர்ட் ராஜ் ஆகிய மூவருக்கும் எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள அல்லது விலக்கு கோராத இந்த மூன்று நபர்களின் வழக்கை மட்டும் முதன்மை வழக்கிலிருந்து தனியாகப் பிரித்து (Split up) விசாரிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் குற்றச்சாட்டுகள் மற்றும் சட்டப்பிரிவுகள் அனைத்தும் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் (Sessions Court) பிரத்தியேகமாக விசாரிக்கப்பட வேண்டிய விசாரணை வரம்பிற்குள் வருவதால், நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான வைகுண்டராஜன் உள்ளிட்ட 5 பேரும் வரும் ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதியன்று திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதித்துறை நடுவர் தனது உத்தரவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டு வழக்கை அடுத்த கட்டத்திற்கு ஒத்திவைத்தார்.








