சென்னை, ஜூன் 10 : அரசு கேபிள் டிவியில் மூன்று செய்தி தொலைக்காட்சிகள் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், இது முழுக்க முழுக்க தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே என்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது போல இதில் எந்தவொரு அரசியல் உள்நோக்கமோ அல்லது ஊடக அடக்குமுறையோ இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகனிடம், அரசு கேபிள் டிவியில் குறிப்பிட்ட மூன்று தனியார் செய்தித் தொலைக்காட்சிகள் கடந்த நான்கு நாட்களாக ஒளிபரப்பப்படாமல் முடக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் மூன்று சேனல்கள் முடக்கப்பட்டதாகக் கூறப்படும் வார்த்தை முற்றிலும் தவறானது என்றும் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளைத் தானே நேரடியாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து செட்டாப் பாக்ஸ்களிலும் இந்த பிரச்சனை இல்லை என்றும், குறிப்பிட்ட சில செட்டாப் பாக்ஸ்களில் மட்டுமே தற்காலிகமாக ஒளிபரப்ப முடியாத ஒரு தொழில்நுட்பச் சூழல் நிலவி வருகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
விவி மினரல்ஸ் வழக்கு: வைகுண்டராஜன் உள்ளிட்ட5 பேர் ஆஜராக உத்தரவு, 3 பேருக்கு பிடிவாரண்ட்
இந்த ஒளிபரப்புப் சிக்கலை மேற்பார்வை செய்து , உடனடியாகச் சரிசெய்வதற்காக ஏற்கனவே ஒரு தொழில்நுட்ப நிறுவனத்துடன் அரசு அக்ரிமெண்ட் போட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் அந்த நிறுவனத்தினர் தற்போது சென்னையில் முகாமிட்டு முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். எனவே இதற்குப் பின்னால் வேறு எந்தவொரு தனிப்பட்ட காரணமோ அல்லது சேனல்களை முடக்கும் எண்ணமோ அரசுக்குக் கிடையாது என்றும் தொழில்நுட்ப வல்லுநர்களும் அந்த நிறுவனத்துடன் இணைந்து மிக வேகமாக வேலை செய்து வருவதாகவும் அவர் விவரித்தார்.
அரசு கேபிள் டிவியின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பிற்குள் ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அலைவரிசை (Bandwidth) ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சில குறிப்பிட்ட அலைவரிசைகளில் மட்டுமே தற்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த கோளாறைத் தாண்டி பாதிக்கப்பட்ட சேனல்களை வேறு அலைவரிசைகளுக்கு மாற்றித் தரலாம் என்றால் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அலைவரிசைகளில் மற்ற சேனல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் அலைவரிசைகளை உடனடியாக மாற்றுவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. இந்தத் தொழில்நுட்பக் கோளாறுக்கு முழுப் பொறுப்பேற்றுள்ள சம்பந்தப்பட்ட வெண்டார் நிறுவனத்தின் பெயரைத் செய்தி மக்கள் தொடர்புத்துறை (DIPR) மூலமாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளோம் என்றும் அவர்கள் கோளாறைச் சரிசெய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.
மொத்தம் உள்ள 16 லட்சம் செட்டாப் பாக்ஸ்களில் பெரும்பாலானவற்றில் சேனல்கள் வராதபோது ‘சில செட்டாப் பாக்ஸ்கள்’ என்று எப்படி கூற முடியும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “என்னுடைய அலுவலகச் சேம்பரில் உள்ள செட்டாப் பாக்ஸில் நீங்கள் குறிப்பிடும் சேனல்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வருகின்றன. உங்கள் சேனல்களின் நிருபர்களை என் அறைக்கு நேரில் அழைத்து வரவழைத்து அவர்களுக்குக் காபி கொடுத்து சேனல்கள் ஓடுவதை நேரிடையாகவே காண்பித்துள்ளேன். எனவே எல்லா இடங்களிலும் இந்த பிரச்சனை இருப்பதாகக் கூறுவது ஏற்புடையதல்ல. நீங்கள் குறிப்பிடுவது போல 12 லட்சம் அல்லது 15 லட்சம் புகார்கள் (Grievances) அரசுக்கு வரவில்லை. இதை நான் மூன்றாவது முறையாகத் தெளிவுபடுத்துகிறேன் இதில் எந்தவொரு பர்சனல் ரீசனோ அல்லது பொலிட்டிகல் ரீசனோ 100 சதவீதம் இல்லை” என்றார்.
கடந்த நான்கு நாட்களாகியும் ஏன் இன்னும் கோளாறைச் சரிசெய்ய முடியவில்லை என்ற கேள்விக்கு விளக்கமளித்த அமைச்சர் இது கடந்த நான்கு நாட்களாகத் தொடரும் ஒரே பிரச்சனை அல்ல என்றார். முதலில் ஒரு ஆன்மீகப் பக்தி சேனலில் ஒரு தொழில்நுட்பப் பிரச்சனை வந்தது. அதனைத் தொழில்நுட்பக் குழுவினர் சரிசெய்வதற்குள் அடுத்தடுத்து இரண்டு செய்தி சேனல்களில் மாறி மாறி இந்த அலைவரிசைப் கோளாறு ஏற்பட்டது. இதனால்தான் தாமதம் ஏற்படுகிறதே தவிர திட்டமிட்ட முடக்கம் அல்ல என்று கூறிய அவர் தனது வீட்டிலும் சம்பந்தப்பட்ட செய்தி சேனல்கள்தான் ஓடிக் கொண்டிருக்கின்றன என்றார்.
அரசு கேபிள் டிவியின் இந்த நடவடிக்கை ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் ஊடகங்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவுகிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் மறுப்புத் தெரிவித்த அமைச்சர், சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி போன்ற எங்களைச் சமரசமின்றித் தொடர்ச்சியாக விமர்சனம் செய்யும் பல ஊடகங்களின் ஒளிபரப்புகள் அரசு கேபிளில் மிகவும் தெளிவாகவும் தடையின்றியும் போய்க்கொண்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்டினார். கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அரசு செயல்படுகிறது என்றால் அந்த சேனல்களும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இல்லாத ஒரு பொதுப் பிரச்சனையைச் சிலர் அரசியலாக்கப் பார்க்கிறார்கள் என்று சாடினார்.
செய்தியாளர்கள் எழுப்பிய கூர்மையான கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் “நீங்கள் செய்கின்ற விமர்சனங்களை விடக் கடுமையான விமர்சனங்களை மற்ற தொலைக்காட்சிகளும் அரசுக்கு எதிராக முன்வைத்து வருகின்றன. எனவே இதில் எள்ளளவும் அரசியல் உள்நோக்கம் கிடையாது. இது 200 சதவீதம் தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே. ஒரு பொதுத் திட்டமாக இருந்தால் இத்தனை நாட்களுக்குள் முடிவடையும் என்று காலக்கெடுவை (Day time) அறிவிக்க முடியும். ஆனால் இது திடீரென ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப நெருக்கடி (Crisis fix) என்பதால் எவ்வளவு சீக்கிரம் சரிசெய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முழுமையாகச் சரிசெய்யப்படும்” என்று உறுதியளித்தார்.








