திருச்சி , June 10 : திருச்சியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது காதலனுடன் தங்கியிருந்த 18 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அளவுக்கு அதிகமான போதை ஊசி பயன்படுத்தியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதா என்ற கோணத்தில் கண்டோன்மென்ட் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (19). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள அந்த இளம்பெண் திருமண மண்டபங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்குச் சென்று உணவு பரிமாறும் ‘கேட்டரிங்’ பகுதிநேர வேலைகளைச் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி தனது குடும்பத்தினரிடம் கேட்டரிங் வேலைக்காக வெளியூர் செல்வதாகவும், திரும்பி வர ஒரு வாரம் ஆகும் என்றும் கூறிவிட்டு அந்தப் பெண் வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார். ஆனால் அவர் வேலைக்குச் செல்லாமல் தனது காதலன் சதாம் உசேனுடன் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
சுற்றுலாவை முடித்துக் கொண்டு சம்பவத்தன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். மதிய உணவிற்காக வெளியில் சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் விடுதி அறைக்குத் திரும்பிய சில நிமிடங்களிலேயே அந்த இளம்பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சதாம் உசேன், உடனடியாக தனது நண்பரான ஷேக் அப்துல்லா என்பவருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அந்தப் பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள் நிலைமை மோசமாக இருந்ததால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதனை செய்த அவசரப்பிரிவு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காதலன் சதாம் உசேன் மற்றும் அவரது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த இளம்பெண்ணுக்கும் 19 வயதான சதாம் உசேனுக்கும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று விடுதி அறையில் வைத்து இருவரும் போதை ஊசி மற்றும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. போதைப்பொருள் உட்கொண்ட பின்னரே இருவரும் மதிய உணவு சாப்பிடச் சென்றுள்ளனர். அதன் பிறகே இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. அளவுக்கு அதிகமான போதைப்பொருள் (Overdose) உடலில் ஏறியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் பலமாக சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும் காதலன் சதாம் உசேன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தாங்கள் சாப்பிட்ட உணவின் காரணமாகவே காதலிக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், உணவில் ஏதேனும் விஷயம் கலந்திருக்குமோ என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. 18 மற்றும் 19 வயதுடைய இளம் வயதினருக்கு இந்த ஆபத்தான போதை ஊசிகள் மற்றும் மருந்துகள் திருச்சியில் யாரால் சப்ளை செய்யப்பட்டது இதன் பின்னணியில் உள்ள போதைப்பொருள் கும்பல் எது என்பது குறித்தும் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை முழுமையாக வந்த பிறகே இளம்பெண்ணின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.








