வில்லிவாக்கத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் அதிரடி ஆய்வு கூட்டம்.

image 317

வில்லிவாக்கம், மே 14 : வில்லிவாக்கம் தொகுதியில் சாலை, மின்சாரம், டாஸ்மாக் கடைகள், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் அதிரடி ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடு குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் முக்கிய ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டல கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தொகுதியில் நடைபெற்று வரும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினர்.

வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட 94, 95, 96, 97, 98 மற்றும் 104வது வார்டுகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் அமைப்பு, கட்டட மேம்பாட்டு பணிகள், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகள், கால்நடைக் காப்பகங்கள், மயான பூமி மேம்பாடு, இறைச்சிக் கூடங்கள், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் மின் துறை சார்ந்த பணிகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

இதனுடன், சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், தமிழ்நாடு மின்சார வாரிய நடவடிக்கைகள், மாவட்ட வருவாய்த் துறை செயல்பாடுகள், குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பொதுப் பணித் துறை மற்றும் நீர்வளத்துறை சார்ந்த திட்டங்களின் நிலைமைகளும் ஆய்வு செய்யப்பட்டன. பாதுகாப்பு பணிகள் தொடர்பாக காவல் துறை அதிகாரிகளுடனும் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைப்படி ஊழலற்ற மற்றும் தூய்மையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மக்களுக்கான திட்டங்கள் எந்தவித தவறும் இல்லாமல் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வில்லிவாக்கம் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட காலத்தில் மக்களிடம் நேரடியாக சென்றபோது பல்வேறு குறைகள் முன்வைக்கப்பட்டதாகவும், அவற்றை துறைவாரியாக தொகுத்து அலுவலர்களிடம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அந்த குறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பெண்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றன. பெண்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகள் மற்றும் பாதைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றி, அவற்றை ஊரின் வெளிப்புற பகுதிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார். தற்போது முதலமைச்சரின் உத்தரவின்படி கல்வி நிலையத்திற்கு அருகில் செயல்பட்டு வந்த ஒரு டாஸ்மாக் கடை அகற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது தொகுதியில் உள்ள 11 டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சாலை வசதிகள் குறித்து பேசும்போது, பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து, தேவையான இடங்களில் புதிய சாலைகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார். நீண்ட காலமாக அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என கூறினார்.

மின்சார துறையுடன் தொடர்புடைய பிரச்சினைகளும் கூட்டத்தில் முக்கியமாக பேசப்பட்டன. தேவையான இடங்களில் புதிய மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்றும், சில பகுதிகளில் உயரம் குறைவாக அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றிகளை பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப உயர்த்தி அமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். தடையின்றி மின்சாரம் வழங்க தேவையான துணை மின் நிலையங்களை அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என கூறினார்.

பெண்களுக்கான தனி ஒப்பனை அறைகள் அமைப்பது, மாணவர்கள் மற்றும் பொதுமக்களை போதைப் பொருட்களிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் மக்களிடம் கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுதல் போன்ற அம்சங்களும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மின்தடை தொடர்பாக மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண் 94987 94987 குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், தற்போது வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் பல நியாயவிலைக் கடைகளை சொந்த கட்டடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வில்லிவாக்கம் தொகுதியில் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்நிலைப் பள்ளிகள் அமைப்பதற்கான திட்டங்களை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் கூறினார். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் அனைத்து துறைகளும் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நாய் தொல்லை மற்றும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்து, மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் சரியான காலக்கெடுவில் நிறைவேற்ற அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூட்டத்தில் வலியுறுத்தினார். இந்த அரசு அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாக செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட வார்டு 94 அன்னை சத்தியா நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அப்பகுதியில் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகளின் குறைகளை நேரடியாக கேட்டறிந்த அவர், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் பிரவேஷ்குமார், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், துணை ஆணையாளர் வி. சிவகிருஷ்ணமூர்த்தி, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செயல் இயக்குநர் கௌரவ் குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1227

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »