ஆந்திரா , ஜூன் 13 : ஆந்திர மாநிலம் டெக்கலி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரராவ் மற்றும் விஜயகுமாரி தம்பதியின் மகள் ஹரிணி. இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு தும்பல தத்தேஸ்வரராவ் என்பவருடன் திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு ஹரிணி ஹைதராபாத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் படித்து வந்தார். அங்கு அவருக்கும் நாகேந்திரா என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதன் காரணமாகத் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு காதலனுடன் வாழ முடிவெடுத்த ஹரிணி கணவருக்கு விவாகரத்து நோட்டீஸும் அனுப்பினார்.

மகளின் இந்த முடிவை அறிந்த பெற்றோர் குடும்ப மானம் போய்விடும் என்று கூறி அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களின் பேச்சை மீறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினர். இதனால் அச்சமடைந்த ஹரிணி உள்ளூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி முறையிட்டார். காவல்துறையினர் இரு தரப்பையும் அழைத்துச் சமாதானம் பேசி அனுப்பிய போதிலும் பெற்றோரின் ஆத்திரம் குறையவில்லை. விவாகரத்து பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஹரிணியை பெற்றோர் வீட்டிற்கு வரவழைத்தனர்.
Also read : நெல்லையில் மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்
பெப்பர் ஸ்பிரே அடித்து நகைக்கடையில் கொள்ளை முயற்சி.. இளம் பெண்களை லாக் செய்த ஓனர்!
வீட்டிற்குப் புறப்படும் முன்பே தனக்கு ஏதேனும் ஆபத்து நேரலாம் என ஊகித்த ஹரிணி தனது காதலனுக்கு ஒரு வீடியோ பதிவை அனுப்பியிருந்தார். அதில் “நான் ஐந்தாம் தேதிக்குள் ஹைதராபாத் வரவில்லை என்றாலோ, எனது கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தாலோ எனக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது என்று உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துவிடு” என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் பயந்தபடியே வீட்டிற்கு வந்த ஹரிணியிடம் பெற்றோர் மீண்டும் வாக்குவாதம் செய்தனர். அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் ஆத்திரமடைந்த தாய் விஜயகுமாரி மற்றும் தாத்த பலுசாகு ஆகியோர் ஹரிணியைத் தாக்கியுள்ளனர். தாய் கால்களைப் பிடித்துக் கொள்ள தாத்தா ஹரிணியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர் அதிகாலையில் அக்கம் பக்கத்தினரிடம் மகள் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடி அவசர அவசரமாக இறுதிச் சடங்குகளை முடித்துப் புதைத்தனர். ஐந்து நாட்களுக்குப் பிறகு ஹரிணியின் காதலன் காவல் நிலையத்தில் அந்த வீடியோ ஆதாரத்தைச் சமர்ப்பித்ததை அடுத்து போலீஸார் சடலத்தைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்தனர். கழுத்தில் காயங்கள் இருப்பது உறுதியானதை அடுத்து, பெற்றோர் மற்றும் தாத்தாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.







