சென்னை,மே 15: மே மாத கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ரூ.2500 உயர்வு எப்போது என்ற கேள்வி தொடர்ந்து எழுகிறது.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் மே மாத கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட ரூ.2500 எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ளது.
தமிழக வெற்றி கழகம் ஆட்சியை பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் எந்த வடிவத்தில் தொடரும், புதிய அரசு அதை மாற்றுமா அல்லது உயர்த்துமா என்ற எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் நிலவி வந்தது.
இந்த சூழலில், நேற்று தமிழக முதலமைச்சர் விஜய் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு முக்கிய கவனத்தை பெற்றது. அந்த அறிவிப்பில், பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதே சமயம் மே மாதத்திற்கான உரிமை தொகை மே 17ஆம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ALso read : வில்லிவாக்கத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் அதிரடி ஆய்வு கூட்டம்.
இந்த அறிவிப்பு வெளியான பிறகு, “இந்த மாதம் உண்மையிலேயே ரூ.1000 வருமா?”, “அரசு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமா?” என்ற கேள்விகள் சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடையிலும் அதிகமாக பேசப்பட்டன. குறிப்பாக மாணவர்களுக்கான உதவித்தொகை நேற்று வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில், மகளிர் உரிமை தொகை குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் பெண்களின் வங்கி கணக்குகளுக்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் உடனடியாக நிறுத்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் இந்த தொகை, தற்போது புதிய அரசின் காலத்திலும் தொடர்ந்திருப்பது அரசியல் ரீதியாகவும் கவனிக்கப்படும் விவகாரமாக மாறியுள்ளது.
தகவலின்படி, தமிழக வெற்றி கழக அரசு தற்போது பல்வேறு நிதி மற்றும் நிர்வாக ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் ஆட்சி அமைந்த உடனே செயல்படுத்துவது சாத்தியமில்லை என்ற அணுகுமுறையில்தான் அரசு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பும் திமுக ஆட்சி அமைந்த பின்னர் கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கு பிறகே கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் நடைமுறைக்கு வந்தது என்பதும் நினைவுபடுத்தப்படுகிறது.
தற்போது ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில் அதை ரூ.2500 ஆக உயர்த்துவது தொடர்பாக நிதித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு தேவையான நிதி ஆதாரம், அரசின் வருவாய் நிலை, ஏற்கனவே உள்ள நிதிச்சுமை போன்ற அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
அதேபோல் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்த 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாகவும் புதிய டாரிஃப் அமைப்பு உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு திட்டத்தையும் கட்டப்படியாக செயல்படுத்துவது குறித்த ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
முக்கியமாக தற்போதுவரை நிதித்துறை அமைச்சர் நியமனம் செய்யப்படாத சூழலும் அரசின் ஆரம்பகட்ட நிர்வாக செயல்பாடுகளில் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சரை சேர்த்து 10 அமைச்சர்கள் மட்டும் பதவியேற்றுள்ள நிலையிலும், முழுமையான அமைச்சரவை இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் செயல்படுத்துதல், பழைய திட்டங்களை மாற்றியமைத்தல் போன்ற பணிகளில் விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஆட்சியின் நிதிநிலை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்த ஆலோசனைகளும் நேற்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் புதிய அரசு அனைத்து திட்டங்களையும் மறுபரிசீலனை செய்து வருகிறது. அந்த செயல்முறையின் ஒரு பகுதியாகவே மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கும் கால அவகாசம் தேவைப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இப்போது மக்களிடையே அதிகமாக எழும் கேள்வி ஒன்று தான் — தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட ரூ.2500 எப்போது அமலுக்கு வரும்? அரசு தரப்பில் இதற்கு நேரடி காலக்கெடு எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் நிதிநிலை ஆய்வுகள் மற்றும் திட்ட மறுசீரமைப்புகள் முடிந்த பிறகு இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.













