“விஜய் இன்னொரு ஸ்டாலின் ஆகக்கூடாது” – திருவாரூரில் அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி

திருவாரூர், May 25: தமிழகத்தில் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத், முந்தைய திமுக ஆட்சியில் நடந்த தவறுகளே இப்போதும் தொடர்வதாக விமர்சித்துள்ளார். மேலும், “தமிழக முதல்வர் விஜய் மற்றொரு மு.க. ஸ்டாலினாக மாறிவிடக் கூடாது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

image 511

திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு நிலை, மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விரிவாகப் பேசினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அர்ஜுன் சம்பத் பேசியதாவது:

“தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள இந்த குறுகிய 15 நாட்களில், மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கொலை, கொள்ளை, மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இல்லாத நாளே இல்லை என்ற அவலநிலைக்கு இன்று தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, கடந்த ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று கடுமையாகப் பேசினார். ‘ஸ்டாலின் அங்கிள்… ராங் அங்கிள்’ என்று விமர்சித்த முதல்வர் விஜய்யைப் பார்த்து, இன்று நாமெல்லாம் ‘வாட் ப்ரோ… வெரி ராங் ப்ரோ’ என்று கேட்கும் நிலைதான் உருவாகியுள்ளது.”

கோவை, நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் சிறுமிகளும் பெண்களும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், குற்றங்கள் நடப்பதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்படும் என்ற தவெக-வின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகக் குறை கூறினார்.

அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், “கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் சிரித்துக் கொண்டே பொறுப்பற்ற முறையில் பேசுகின்றனர். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. தவெக-வின் ஆட்சி என்பது ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியாகவே தொடர்கிறது. திமுக ஆட்சியில் நிலவிய மின்தடைப் பிரச்சினை, தற்போதும் தொடர்வதே இதற்கு சான்று,” என்றார்.

மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்துப் பேசிய அர்ஜுன் சம்பத், வெறும் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும், குற்றங்கள் பெருகக் காரணமான டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முதல்வர் விஜய்யின் 100 நாள் ஆட்சியை தங்களது கட்சி உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், உடனடியாக போராட்டங்கள் நடத்தும் திட்டம் ஏதுமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளை அர்ஜுன் சம்பத் கடுமையாக சாடினார்.

“தேர்தலில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை வீழ்த்திவிட்டுத்தான் விஜய் ஆட்சியைப் பிடித்தார். ஆனால் இன்று, தவெக-வை ‘ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை’ என்று விமர்சித்த வன்னியரசு போன்றவர்கள் அடங்கிய கட்சியின் பிரதிநிதிகள் தவெக அமைச்சரவையில் மந்திரி பதவியில் அமர்ந்துள்ளனர். ஒருபுறம் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போதைய ஆட்சியிலும் திமுகவின் திட்டங்களே தொடர்வதாகக் கூறுகிறார். மறுபுறம், திமுகவின் முன்னாள் கூட்டணிக் கட்சிகள் தவெக-வுடன் கைகோர்த்துள்ளன. இந்த சந்தர்ப்பவாத அரசியலுக்கு விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள்தான் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அர்ஜுன் சம்பத் விளக்கமளித்தார்.

மத்திய அரசு ஏற்கனவே உற்பத்தி வரி மற்றும் கலால் வரியைக் குறைத்து விலை உயர்வைக் கட்டுப்படுத்தியதைச் சுட்டிக்காட்டிய அவர், பிரதமரின் அந்தப் பாதையை மாநில அரசும் பின்பற்ற வேண்டும் என்றார். மேலும், எரிபொருட்களை ஜிஎஸ்டி (GST) வரி வரம்பிற்குள் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே விலையை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும், மாநில அரசு தன் பங்கிற்கு வரிகளைக் குறைக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதிமுக-வின் தற்போதைய உட்கட்சிப் பூசல்கள் தற்காலிகமானவை என்று குறிப்பிட்ட அர்ஜுன் சம்பத், “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட ஒரு மகத்தான மக்கள் இயக்கம் அதிமுக. வரலாற்றில் பல கட்சிகளில் பிளவுகளும், பின் இணைப்புகளும் நடந்துள்ளன. அதுபோலவே விரைவில் அதிமுக ஒன்றுபடும். திமுக என்ற தீய சக்தியை ஒழிப்பதில் அந்தப் பேரியக்கம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்துப் பேசுகையில், “தமிழக மக்கள் தற்போது பாஜகவை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். கடந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 3.5 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், வெறும் 27 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட பாஜக அதே 3.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி தற்போது 19 சதவீதத்தைத் தாண்டியுள்ளது தெளிவாகிறது,” என்று கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 983

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »