
Nellai , May 9 : 120 எம்எல்ஏ ஆதரவுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக ஆட்சி உறுதியான நிலையில், நெல்லையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தொண்டர்கள் கொண்டாடினர்.
தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
Also Read : விசிகவை தொடர்ந்து தவெகவுக்கு முஸ்லிம் லீக்கும் நிபந்தனையற்ற ஆதரவு ! கூட்டணி கணக்கில் புதிய திருப்பம்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற மேஜிக் எண்ணிக்கையை எட்ட முடியாததால், கூட்டணி ஆதரவை பெறுவதற்கான அரசியல் நகர்வுகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்றன.
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தொடர்ந்து தங்களது ஆதரவை அறிவித்தன. இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்தது.
இதன் மூலம் தமிழக வெற்றி கழக கூட்டணியின் பலம் 120 என்ற எண்ணிக்கையை கடந்ததாக அரசியல் வட்டாரங்களில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்காக விஜய் ஆளுநரை சந்தித்த நிகழ்வும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் நாளை பதவியேற்பு நிகழ்வுக்கான ஒப்புதலையும் ஆளுநர் வழங்கியுள்ளதாக கூறப்படுவதால், தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்க உள்ளதாக பார்க்கப்படுகிறது.
நெல்லையில் வெடித்த கொண்டாட்டம் : இந்த அரசியல் முன்னேற்றத்தை தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சாலைகளில் சென்ற பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்ட நிலையில், “விஜய் முதல்வர்” என்ற முழக்கங்களும் அந்தப் பகுதியில் ஒலித்தன. கட்சி கொடிகளை ஏந்திய இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலரும் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர். அரசியல் வெற்றியை பண்டிகை போல மாற்றிய இந்த நிகழ்வு, வேகமாக மக்களிடையே பரவி வருகிறது.
இந்த கொண்டாட்டம் குறித்து பேசிய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் புல்லட் ராஜா, “இன்று மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த நன்னாள் போல உள்ளது. தீபாவளி, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகளை மக்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ, அதேபோல தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியையும் மக்கள் நாடெங்கும் கொண்டாடி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.





