
சென்னை, மே 25: தமிழக அரசியல் களம் எப்போதுமே கணிக்க முடியாத திருப்பங்களுக்கும், கடைசி நேரக் கூட்டணிக் கணக்குகளுக்கும் பெயர் பெற்றது. ஆனால், சமீபகாலமாகத் தமிழக அரசியல் வட்டாரங்களில் அரசல் புரசலாகத் தொடங்கி, தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கும் ஒரு புள்ளிவிவரம் அல்லது அச்சம்: “இன்றைய சூழலில் ஒரு மறுத்தேர்தல் வந்தால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 234 தொகுதிகளையும் கைப்பற்றிவிடுமா?” என்பதுதான். இந்த ஒற்றைக் கேள்வி, திரைக்குப் பின்னால் பிரதான அரசியல் கட்சிகளின் வியூகங்களை வெகுவாக மாற்றியமைக்கத் தொடங்கியிருக்கிறது.
கடந்த சில தசாப்தங்களாகத் தமிழக அரசியல் என்பது இருமுனைப் போட்டியாகவோ அல்லது வலுவான கூட்டணிக் கட்டமைப்பைக் கொண்டதாகவோ மட்டுமே இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில், புதிதாகக் களம் கண்டுள்ள தவெக-வை நோக்கி இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றின் நகர்வுகள் எப்படி இருக்கும் என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, தேர்தல் செலவினங்கள், தற்போதைய கட்சிகளின் உள்முரண்பாடுகள் மற்றும் மக்கள் மத்தியில் நிலவும் ஒருவித மாற்றத்திற்கான மனநிலை ஆகியவை இந்த அச்சத்தை மேலும் கூட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மறுத்தேர்தல் என்ற பேச்சு எழும்போது, பிரதான கட்சிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் நிதி மற்றும் வேட்பாளர் தேர்வுதான். ஒரு பொதுத்தேர்தலைச் சந்தித்து முடித்த குறுகிய காலத்திலேயே மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திப்பது என்பது தற்போதைய பொருளாதாரச் சூழலில் சாத்தியமற்ற ஒன்று எனப் பல கட்சிகளின் உள்வட்டாரங்கள் புலம்புகின்றன. “இப்போது நின்ற வேட்பாளர்களே மீண்டும் களம் காணத் தயங்குவார்கள்; தேர்தல் செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், மீண்டும் முதலீடு செய்யக் கட்சிகள் தயங்கும்” என்பதே யதார்த்த நிலை. இந்த பலவீனமே விஜய்க்குச் சாதகமான அலையாக மாறிவிடக்கூடும் என்ற பயம் மற்ற கட்சிகளிடம் நிலவுகிறது.
இன்னொருபுறம், கூட்டணி அமைப்பதில் “வெளியிலிருந்து ஆதரவு” (External Support) என்ற அரசியல் அஸ்திரமும் விவாதிக்கப்படுகிறது. ஆட்சியில் நேரடியாகப் பங்கு பெறாமல், மக்கள் மீது மீண்டும் ஒரு தேர்தலைத் திணிக்கக் கூடாது என்ற பொது நோக்கைக் காட்டி வெளியிலிருந்து ஆதரவளிப்பது ஒரு நாகரிகமான அரசியலாகப் பார்க்கப்பட்டாலும், அதன் பின்னணியில் உள்ள நிஜம் வேறானது. பொதுவாக, ஆட்சியில் நேரடியாகப் பங்கு பெற முடியாத நிலை அல்லது ஆதரவு கோரியும் முக்கியக் பதவிகள் கிடைக்காத பட்சத்திலேயே கட்சிகள் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கின்றன. ஆனால், இன்றைய அரசியல் சூழலில் “இலவச மதிய உணவு என்று எதுவுமில்லை” (There is no free lunch) என்ற கோட்பாட்டின்படி, எந்தவொரு கட்சியும் ஆதாயமின்றியோ அல்லது அதிகாரப் பங்கீடின்றியோ தவெக போன்ற ஒரு புதிய கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வராது.
இடதுசாரிகளும் விசிக போன்ற கட்சிகளும் நீண்டகாலமாகவே “அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கையைத் தங்களின் முதன்மைப் பிரசாரமாக முன்வைத்து வருகின்றன. திராவிடக் கட்சிகளின் நிழலில் இருந்து வெளிவந்து, ஆட்சிக் கட்டிலில் தமக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நீண்டகால லட்சியம். அவ்வாறு இருக்கும்போது, விஜய்யுடன் களம் காண்பதன் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தால், அதை அவர்கள் தவிர்க்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால், இங்குதான் ஒரு பெரும் தர்மசங்கடம் எழுகிறது.
தமிழக 16வது சட்டப்பேரவை கலைக்கப்பட்டது
விஜய் இன்னும் அரசியல் நிர்வாகப் பாதையில் ஒரு “அறியப்படாத காரணி” (Unknown Commodity) ஆகவே நீடிக்கிறார். கட்சியின் கொள்கைகள், மாநாடுகள் தாண்டி, ஒரு மாநிலத்தை ஆள்வதற்கான நிர்வாகத் திறன் அவரிடம் எப்படி இருக்கும், கூட்டணித் தோழமைகளை அவர் எவ்வாறு கையாளுவார், அதிகாரப் பகிர்வுக்குச் சம்மதிப்பாரா போன்ற கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் இல்லை. இதனால், அவருடன் களம் காண்பது என்பது “அபாயமும் வாய்ப்பும்” (Risk vs Opportunity) கலந்த ஒரு சூதாட்டமாகவே பல கட்சிகளால் பார்க்கப்படுகிறது.
ஒருவேளை மறுத்தேர்தல் வந்து, அதில் விஜய் பலத்த வெற்றி பெற்றால், தங்களின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் ஒருபுறம்; அதே நேரத்தில், இப்போது அவசரப்பட்டு அவருடன் கரம் கோர்த்து, பின்னர் அவரது அரசியல் நகர்வுகள் தங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறாக அமைந்தால் வெளியேறவும் முடியாமல், உள்ளே நீடிக்கவும் முடியாமல் சிக்கிக்கொள்வோமோ என்ற தயக்கம் மறுபுறம் நிலவுகிறது. இந்தத் தயக்கமே கட்சிகளின் பொது மேடைப் பேச்சுகளுக்கும், அவர்களின் மூடிய அறை ஆலோசனைகளுக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளிக்குக் காரணம்.
சுருக்கமாகச் சொன்னால், 234 தொகுதிகளையும் விஜய் வெல்வாரா என்பது தற்போதைக்கு ஒரு தத்துவார்த்தக் கேள்விதான் என்றாலும், அந்தச் சாத்தியக்கூறு ஏற்படுத்தியுள்ள உளவியல் தாக்கம் நிஜமானது. தமிழக அரசியல் ஒரு புதிய தலைமுறை மாற்றத்தை நோக்கி நகர்கிறதா அல்லது பாரம்பரிய கூட்டணிக் கணக்குகளே மீண்டும் வெல்லுமா என்பதைத் தீர்மானிக்கும் புள்ளியில், இந்த “மறுத்தேர்தல் பயம்” மற்ற கட்சிகளைத் தங்களின் வியூகங்களை மறுபரிசீலனை செய்யக் கட்டாயப்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை
-சிறப்பு செய்தி தொகுப்பு





