
Chennai , May 6: தமிழக அரசியலில் நிலவி வந்த தேர்தல் களம் தற்போது அடுத்த முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. மாநிலத்தின் 16-வது சட்டப்பேரவை அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டு, 17-வது சட்டப்பேரவையை அமைப்பதற்கான சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக ரீதியிலான நடைமுறைகள் ஆளுநர் மாளிகையில் இன்று வேகமெடுத்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள சூழலில், ஆளுநரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர், இன்று பிற்பகல் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர். அண்மையில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 234 வேட்பாளர்களின் விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வப் பட்டியலை அவர்கள் ஆளுநரிடம் முறைப்படி சமர்ப்பித்தனர். தமிழக அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநரைச் சந்திப்பதற்கு முன்பாகவே தேர்தல் அதிகாரிகளின் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
TVK Alliance பரபரப்பு: EPS மீது அழுத்தம் – தமிழக அரசியலில் அதிர்ச்சி திருப்பம்
தேர்தல் ஆணையத்தின் பட்டியல் ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்தே, நடப்பு 16-வது சட்டப்பேரவையைக் கலைப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியானது. இதன் மூலம் தேர்தல் தொடர்பான முந்தைய நிர்வாகக் கடமைகள் அனைத்தும் நிறைவு பெற்று, புதிய சட்டப்பேரவைக்கான கட்டமைப்பு முறைப்படி தொடங்கியுள்ளது.
இந்த அதிகாரப்பூர்வப் பின்னணியில், புதிய அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை ஆதரவைக் கோரும் அரசியல் சட்ட நடைமுறைகள் ஆளுநர் மாளிகை தரப்பில் தொடங்கப்பட்டுள்ளன. புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பதற்கான பூர்வாங்கப் பணிகள் சட்ட விதிகளின்படி அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய அரசு அமைப்பதற்குத் தன் கட்சியின் ஆதரவைக் கோரும் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. எனினும், ஆளுநர் மாளிகை (ராஜ் பவன்) தரப்பில் இருந்தோ அல்லது தவெக தரப்பில் இருந்தோ இது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும், விளக்கமும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இதனால் புதிய அரசுக்குத் தேவையான முழு பெரும்பான்மை ஆதரவை நிரூபிப்பது தொடர்பாக, ஆளுநர் தரப்பில் கேட்கப்பட்டுள்ள கூடுதல் விவரங்கள் என்ன, அவை எப்போது சமர்ப்பிக்கப்படும் என்பது குறித்த அரசியல் விவாதங்களும், எதிர்பார்ப்புகளும் தலைமைச் செயலக வட்டாரங்களில் அதிகரித்துள்ளன.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பேரவை கலைக்கப்பட்டு புதிய வேட்பாளர் பட்டியல் கைக்கு வந்துள்ளதால், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியின் தலைவருக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுக்க வேண்டும். சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆளுநரைச் சந்தித்து ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் கடிதத்தை அளிக்கும் பட்சத்தில், அதனை ஆய்வு செய்துவிட்டு அடுத்தகட்டமாகப் பதவியேற்புக்கான தேதியை ஆளுநர் அறிவிப்பார். தற்போதைய சூழலில், பெரும்பான்மை ஆதரவு தொடர்பான ஆவணங்கள் முழுமையாகச் சரிபார்க்கப்பட்ட பின்னரே, புதிய அரசு அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியாகும் வழங்கப்படும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கேள்வியாக உள்ளது. பெரும்பான்மை ஆதரவு உறுதி செய்யப்பட்டவுடன், ஆளுநர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.





