சென்னை , May 27: அதிமுகவில் கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வந்த பலப்பரீட்சை மற்றும் உட்கட்சிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு அவரோடு இணைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதற்காக, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து அவர்கள் தங்களது மன்னிப்பு கடிதங்களை வழங்கியுள்ளனர்.
பின்னணி என்ன?
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும், எஸ்.பி. வேலுமணி தரப்பிற்கும் இடையே சுமுகமான சூழல் நிலவவில்லை. கடந்த மூன்று வாரங்களாக இரு பிரிவினரும் தனித்தனி அணிகளாகவே செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற காவேரி அரசுக்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டார்கள், இதன் காரணமாக, கொறடா உத்தரவை மீறிய 13 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தனர். இந்த நடவடிக்கை தங்களின் அரசியல் எதிர்காலத்திற்கு முட்டுகட்டையாக மாறக்கூடும் என்ற சூழலில், இரு தரப்பிற்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன.
Also Read : கோவை ஆனைமலை அருகே 300 ஆண்டுகள் பழமையான கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம்
ஆலோசனைக் கூட்டம் :
இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு, எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர். அங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இரு தரப்பிற்கும் இடையே மூடிய அறைக்குள் தீவிர ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையின் போது, கடந்த கால கசப்புகளை மறந்து கட்சியின் ஒற்றுமைக்காக இணைந்து செயல்பட இரு தரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது, கொறடா உத்தரவை மீறியதற்கான தங்களது விளக்கத்தையும், மன்னிப்பு கடிதத்தையும் எடப்பாடி பழனிசாமியிடம் அவர்கள் நேரில் ஒப்படைத்தனர். இனி கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு, ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்ற உத்தரவாதத்தையும் அவர்கள் வழங்கியுள்ளனர்.
இபிஎஸ் இல்ல சந்திப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி தரப்பு முக்கிய நிர்வாகிகளுடன் ஒரே குழுவாகத் தலைமைச் செயலகத்திற்குப் புறப்பட்டனர். இவர்களுடன் இபிஎஸ் ஆதரவாளர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆற்காடு சுகுமார், வேதாரண்யம் மணியன், தளவாய் சுந்தரம் மற்றும் மாவட்டச் செயலாளர்களான ஆர்.பி. உதயகுமார், சேலம் இளங்கோவன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரைச் சந்தித்த 13 எம்.எல்.ஏ.க்களும், தங்களுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட கட்சித் தாவல் தடைச் சட்டப் புகாரைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், கொறடா உத்தரவை மீறியதற்குத் தார்மீக ரீதியாக மன்னிப்புக் கோருவதாகவும் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பாலகிருஷ்ண ரெட்டி, ஆற்காடு சுகுமார், திலீபன், எம்.எஸ்.எம். நடராஜன், மோகன், ஹரிபாஸ்கர் ஆகிய ஆறு எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ்ஸைச் சந்தித்து சபாநாயகரிடம் கடிதம் அளித்திருந்த நிலையில், இன்று எஞ்சிய 13 பேரும் இணைந்து கடிதம் கொடுத்துள்ளனர். சபாநாயகரைச் சந்தித்தவர்களில் திருத்தணி அரி, பாலக்கோடு கே.பி. அன்பழகன், குமரவேல், லால் லீமா ரோஸ், சேகர், விஸ்வநாதன், ராகேஷ், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, சி.விஜயபாஸ்கர், அருள்மொழிதேவன் மற்றும் ரவி மனோகரன் ஆகியோர் அடங்குவர்.
சி.வி. சண்முகத்தின் அடுத்தகட்ட நகர்வு என்ன?
எஸ்.பி. வேலுமணி தரப்பு ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்துள்ள நிலையிலும், இந்த அணியில் முக்கியப் புள்ளியாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்றைய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை மேலும் இன்று காலையில் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை அவர் தவிர்த்ததுடன், இபிஎஸ் இல்ல சந்திப்பிற்கும் அவர் வரவில்லை.












