சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வால்பாறை: கிடப்பில் போடப்பட்ட படகு இல்ல புனரமைப்புப் பணிகள் – நிரந்தர ஆணையர் நியமிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
வால்பாறை,May 27 : மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மடியில், ‘ஏழாவது சொர்க்கம்’ என்று இயற்கை ஆர்வலர்களால் வர்ணிக்கப்படும் கோவை மாவட்டத்தின் வால்பாறைக்கு, நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து வருகிறது. கேரளாவின் அண்டை மாநில எல்லைகள், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வால்பாறையின் எழிலைக் காண திரண்டு வருகின்றனர்.

பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள், காபி மற்றும் குறுமிளகுத் தோட்டங்கள் என பசுமைப் போர்வையால் சூழப்பட்ட இப்பகுதி, கண்ணுக்குக் குளிர்ச்சியான பனிப்பொழிவு மற்றும் மிதமான சாரல் மழையுடன் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இயற்கை எழில் மட்டுமன்றி யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் மற்றும் அரிய வகை வரையாடுகள் போன்ற வனவிலங்குகளின் புகலிடமாகவும் வால்பாறை அடர்ந்த வனப்பகுதி திகழ்கிறது.
Also Read : உர விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி நெல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
இங்கு வரும் பயணிகள் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, நல்லமுடி காட்சிமுனை (Nallamudi Viewpoint), பாலாஜி கோவில், சோலையார் சித்தி விநாயகர் கோவில், சோலையார் அணை, நீரார் அணை மற்றும் கூழாங்கல் ஆறு போன்ற முக்கிய இடங்களை ரசித்துச் செல்கின்றனர். குறிப்பாக, தற்போதைய பனிப்பொழிவும் சாரல் மழையும் தேயிலைத் தோட்டங்களின் அழகை மேலும் கூட்டிக் காட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வார இறுதி நாட்களில் வழக்கத்தை விட அதிகமாகக் காணப்படுகிறது.
சுற்றுலா மேம்பாட்டிற்காக வால்பாறை நகராட்சியால் கடந்த 2019-2020ஆம் நிதியாண்டில், சுமார் ₹6 கோடி மதிப்பீட்டில் ‘அம்மா படகு இல்லம்’ கட்டப்பட்டது. தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே, இந்த படகு இல்லம் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்குச் சுமார் ₹14 லட்சத்திற்கும் மேல் நிலையான வருவாய் கிடைத்து வந்தது. உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சிறந்த பொழுதுபோக்கு இடமாக இது அமைந்திருந்தது.
பிரச்சினையின் பின்னணி: கடந்த ஆண்டு இங்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த சூழலில், படகு இல்ல நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும் அதிகளவில் தேங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசத் தொடங்கியதால், படகு இல்லத்தைத் தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தரப்பில் அரசுக்குத் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் நேரடியாக வால்பாறை படகு இல்லத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி, நீர்நிலையைத் தூர்வாரி மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று அப்போதைய வால்பாறை நகராட்சி ஆணையாளருக்கு அவர் உத்தரவிட்டார்.
ஆனால், மாவட்ட ஆட்சியரின் அந்த உத்தரவு நகராட்சி நிர்வாகத்தால் உரிய முறையில் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து அங்கு பொறுப்பேற்ற தற்காலிகப் பொறுப்பு ஆணையாளர்கள், பணிகளைத் தொடங்கப் போவதாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்து, புகைப்படங்களுக்குப் ‘போஸ்’ கொடுத்ததோடு சரி, நடைமுறையில் எந்தவொரு தூர்வாரும் பணியையும் மேற்கொள்ளவில்லை என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அண்மையில் பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் வால்பாறைக்குக் கூடுதல் பொறுப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டார். அவரும் இப்பிரச்சினையில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிப்பதாக ஊடகங்களிடம் உறுதியளித்த போதிலும், இதுவரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவு காகித அளவிலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து வந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் படகு இல்லப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
முறைகேடு புகார்: அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தற்போது தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், வால்பாறை படகு இல்லப் பராமரிப்பு மற்றும் அதன் கட்டுமானப் பணிகளில் ₹20 கோடிக்கும் மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் புதிய புகாரை எழுப்பியுள்ளனர். அரசுப் பணம் வீணடிக்கப்பட்டிருப்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து வால்பாறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில்:
“வால்பாறை நகராட்சிக்கு என்று ஒரு நிரந்தர ஆணையாளர் இல்லாததே இதுபோன்ற நிர்வாகச் சீர்கேடுகளுக்கு முக்கியக் காரணம். பொறுப்பு அதிகாரிகளால் முழு நேரக் கவனத்தைச் செலுத்த முடிவதில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக வால்பாறைக்கு ஒரு நிரந்தர ஆணையாளரை நியமிக்க வேண்டும். மேலும், முடங்கிக் கிடக்கும் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முடித்து, படகு இல்லத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும்” என்றார்.








