மேலூர்,May 27 : மதுரை மாவட்டம் மேலூர் அருகே, குடும்பத் தகராறு மற்றும் மது போதையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, முப்பது வயது இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் நண்பர் ஒருவரைப் பிடித்து மேலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த திருவாதவூர் ஊராட்சிக்கு உட்பட்ட டி.வெள்ளமுத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் ராஜ்குமார் (30). லாரி மற்றும் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவருக்கும், திவ்யா என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்துள்ளது. பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது காதல் திருமணம் நடைபெற்று, தற்போது ரக்சன் என்ற இரண்டரை வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
Also Read : வால்பாறை டூரிசம் பாதிக்குமா? கிடப்பில் போடப்பட்ட படகு இல்லப் பணிகள் மீது எதிர்ப்பு
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, திவ்யா வீட்டில் இருந்த சில பொருட்களை எடுத்துக் கொண்டு, குழந்தையுடன் திடீரென மாயமானதாகத் தெரிகிறது. மனைவியைத் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், ராஜ்குமார் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். வீட்டில் தனியாக வசித்து வந்த அவர், இதன் காரணமாகத் தொடர்ந்து மதுப்பழக்கத்திற்கும் ஆளாகியுள்ளார்.
நள்ளிரவில் வெடித்த தகராறு: வழக்கம்போல் நேற்று இரவும் ராஜ்குமார், தனது நண்பர்கள் சிலருடன் டி.வெள்ளமுத்தம்பட்டி விலக்கு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் அருகே அமர்ந்து அவர்கள் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில், போதை தலைக்கேறிய நிலையில் ராஜ்குமாருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றி, இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பாக மாறியுள்ளது. அங்கிருந்தவர்கள் சத்தம் கேட்டு விலக்க முயன்றபோதும், போதையில் இருந்ததால் ஒருவரையொருவர் ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொண்டுள்ளனர்.
அரை நிர்வாண நிலையில் சடலம்: இந்நிலையில், இன்று அதிகாலை அந்தப் பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள், மாரியம்மன் கோவில் தண்ணீர் தொட்டி அருகே வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது, அவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில், அரை நிர்வாணமாக உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்தான் அப்பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் என்பது உறுதி செய்யப்பட்டது. கொலையாளிகள் நள்ளிரவில் தகராறு முற்றிய கட்டத்தில், அங்கிருந்த கனமான கல்லை எடுத்து ராஜ்குமாரின் தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் உடனடியாக மேலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், ராஜ்குமாரின் உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காக ராஜ்குமாரின் உடல் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசாரின் தீவிர விசாரணை: இக்கொலைச் சம்பவம் தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். முதற்கட்டமாக, நேற்று இரவு ராஜ்குமாருடன் அமர்ந்து மது அருந்திய நண்பர்கள் யார் யார் என்ற பட்டியலைச் சேகரித்த போலீசார், அவர்களில் சந்தேகத்திற்குரிய ஒருவரை இன்று காலை அதிரடியாகக் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தற்காலிகத் தகராறில் இந்த விபரீதம் நடந்ததா, அல்லது குடும்பத்தை விட்டு மனைவி பிரிந்து சென்ற விவகாரத்தில் ஏதேனும் முன்விரோதம் காரணமா, அல்லது வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என்ற பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். பிடிபட்ட நபரிடம் நடத்தப்படும் முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலையின் உண்மையான காரணம் தெரியவரும்” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊரிலேயே, வாலிபர் ஒருவர் நள்ளிரவில் கல்லால் அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் டி.வெள்ளமுத்தன்பட்டி கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கப் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.








