சென்னை, ஜூலை 1: தமிழகத்தில் குறுக்கு வழியில் ஆட்சி அமைப்பதற்காகத் திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைப் பல கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சிப்பதாகத் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் திமுகவின் இத்தகைய குதிரை பேர முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை காவல்துறை தற்போது மூன்று பேரைக் கைது செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் தமிழக மக்களிடம் கொள்ளையடித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை வைத்துக் கொண்டு எப்படியாவது தற்போதைய ஆட்சியைக் கவிழ்த்து விடலாம் எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டுச் சேர்ந்து திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதற்காகத் திமுகவின் முக்கியப் புள்ளியான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகியோரை முகாந்திரமாக வைத்துக்கொண்டு ஆளும் கட்சி எம்எல்ஏக்களைத் திமுக தலைமை கடந்த 40 நாட்களாகத் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேரம் பேசி வருவதாக அவர் சாடினார்.
ALso Read : TVK எம்எல்ஏக்கு ரூ.35 கோடி பேரம்? 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்; விசாரணை தீவிரம்
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தலா 10 கோடி, 20 கோடி தொடங்கி 50 கோடி ரூபாய் வரை தருவதாகத் தூண்டில் வீசப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அடுத்ததாக நடைபெறவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்தப் பேரங்கள் பேசப்பட்டு வந்ததாகக் கூறினார். அவ்வாறு தொடர்பு கொள்ளப்பட்ட தங்களின் எம்எல்ஏ ஒருவர் இந்த சட்டவிரோத பேரத்தை நிராகரித்தபோது அவரைத் திமுக தரப்பினர் மிரட்டும் தொனியில் எச்சரித்ததாக அவர் விவரித்தார்.
பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து குதிரை பேரத்தில் நேரடியாகப் ஈடுபட்ட நரேஷ் தியாகராஜன் உள்ளிட்ட மூன்று பேரைக் கையும் களவுமாகப் பணத்துடன் கைது செய்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். கைது செய்யப்பட்டுள்ள நரேஷ் என்பவர் செந்தில் பாலாஜியுடனும் அவரது தம்பி அசோக்குடனும் தினசரி தொடர்பில் இருந்து, எந்தெந்த எம்எல்ஏக்களுக்கு எவ்வளவு பணம் கைமாற வேண்டும் என்ற விவரங்களைத் திட்டமிட்டு இயக்கியவர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து இந்த கேவலமான அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதை இந்த கைது நடவடிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என்ற அமைச்சர் மக்கள் அனைவரும் இவர்களின் சுயரூபத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். கடந்த தேர்தலில் ஒரு தொகுதிக்கு 70 கோடி ரூபாய் வரையிலும் வாக்காளர்களுக்கு தலா 2000 ரூபாய் வரையிலும் பணத்தை வாரி இறைத்துத் திமுக முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்ட அவர், தங்களது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெறும் 3 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்து மக்களின் உண்மையான ஆதரவோடு வெற்றி பெற்றவர்கள் என்பதால் இத்தகைய கோடிகளைப் பார்த்து அவர்கள் ஒருபோதும் விலைபோக மாட்டார்கள் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
நடந்து முடிந்த தேர்தலில் முதலமைச்சராக இருந்த ஒருவரே அதாவது முதலமைச்சர் வேட்பாளரே தோற்றுப் போனது தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத ஒரு பெருத்த அவமானம் என்று மு.க.ஸ்டாலினை நேரடியாகச் சாடிய அமைச்சர், மக்கள் வழங்கிய தீர்ப்பை திமுக தலைமை இன்னும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். கூட்டணி கட்சிகளெல்லாம் திமுகவின் இத்தகைய கீழ்த்தரமான செயல்பாடுகளைப் பார்த்துவிட்டு அவர்களைத் தனியாக விட்டு வெளியேறிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும் என்று பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் மு.க.ஸ்டாலினே நேரில் சென்று பேசியதாகவும், அதுவும் தோல்வியில் முடிந்ததால் தற்போது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் வேலையில் இறங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டை அடுக்கினார்.
செந்தில் பாலாஜி மற்றும் கரூர் கம்பெனி என்ற பெயரில் இயங்கும் கரூர் கும்பலின் சட்டவிரோதப் பணப் புழக்கங்கள் குறித்துக் காவல்துறைக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன என்றும் இந்த குதிரை பேர சதியில் தொடர்புடைய பின்னணி நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை ஆதாரங்களின் அடிப்படையில் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.
இனிமேலும் இத்தகைய கீழ்த்தரமான குறுக்கு வழி அரசியலை விடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்குச் செய்த துரோகங்களுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டே ஒதுங்க வேண்டும் இல்லையெனில் கொள்கை இல்லாத திமுகவும் அதிமுகவும் பாரதிய ஜனதா கட்சி போல ஒட்டுமொத்தமாக இணைந்து கொண்டு தங்களின் அரசியல் ஆதாயத்தைத் தேடிக் கொள்ளலாம் என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தனது பேட்டியில் ஆவேசமாகத் தெரிவித்தார். தேர்தல் இன்றோ அல்லது நாளைக்கோ எப்போது வந்தாலும் அதனைச் சந்திக்கத் தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியும் 100 விழுக்காடு நம்பிக்கையுடன் தயாராக இருப்பதாகவும் அவர் சவால் விடுத்தார்.





