திருச்சி , ஜூன் 25: திருச்சி விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தொடர்பாக தமிழக தற்போதைய அமைச்சர் ஆனந்துக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் திருச்சிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கான அனுமதிக் கடிதங்களை திருச்சி – புதுக்கோட்டை சாலையில் உள்ள விமான நிலையம் எதிரே அமைந்துள்ள விநாயகர் கோயிலில் வைத்து, கட்சியின் பொதுச்செயலாளரும் தற்போதைய அமைச்சருமான ஆனந்த் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
Also : லஞ்ச ஒழிப்புச் சோதனை: ஏ.வ.வேலு மீது வழக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்
முதல்வரின் குட்டி கதை: “அரசியல் பேச சட்டசபைதான் சிறந்த இடம்” – நிர்மலா சீதாராமன் விளக்கம்
அமைச்சரின் இந்த வழிபாட்டின்போது அங்கு ஏராளமான கட்சித் தொண்டர்கள் திரண்டனர். இதனால் திருச்சி – புதுக்கோட்டை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் காவல்துறையினரின் நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்ததாகவும் கூறி அமைச்சர் ஆனந்த் உள்ளிட்டோருக்கு எதிராகத் திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தினர் கடந்த 2025-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட இந்த காவல் துறை வழக்கை ரத்து செய்யக் கோரி, அமைச்சர் ஆனந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது அமைச்சர் ஆனந்த் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கானது முற்றிலும் அரசியல் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். தொண்டர்கள் கூடினால் ஏற்படும் இயல்பான சூழலை அரசியல் காரணங்களுக்காக வழக்காக மாற்றியுள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி இளந்திரையன், அமைச்சர் ஆனந்துக்கு எதிராகத் திருச்சி போலீசாரால் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை முழுமையாக ரத்து செய்து இன்று அதிரடி உத்தர பிறப்பித்தார். இதன் மூலம் கடந்த ஓராண்டாக நிலுவையில் இருந்த இந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.





