சென்னை , ஜூன் 22: தமிழக சட்டமன்றப் பேரவையின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது தொலைக்காட்சி மற்றும் இணையதளங்கள் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் ,அவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புணர்ச்சியுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர்App எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பேரவையில் நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டி ,இனிவரும் காலங்களில் கண்ணியக் குறைவான செயல்களில் ஈடுபட்டால் அது அவையின் உரிமை மீறலாகக் கருதப்பட்டு கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Also : சட்டசபையில் பரபரப்பு! Protocol விவகாரத்தில் சபாநாயகர் அதிரடி உத்தரவு – என்ன நடந்தது?
நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், இன்று அவை கூடியதும் சபாநாயகர் இந்த முக்கியமான அறிவுறுத்தலையும் எச்சரிக்கையையும் உறுப்பினர்களுக்கு வழங்கினார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேரவை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் உள்ள மற்ற உறுப்பினர்களைக் கேலி செய்யும் நோக்கில் சில முக பாவனைகளையும், சைகை மொழிகளையும் வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது. நேரலை ஒளிபரப்பில் பதிவான இந்த காட்சிகள், கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதோடு பரவலாகப் பகிரப்பட்டும் வந்தன.
Also ;TN Assembly : தொழிற்சாலை விபத்து: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அமைச்சர் பர்வேஷ் விளக்கம்
இந்த விவகாரத்தை அவையின் கவனத்திற்குக் கொண்டு வந்த சபாநாயகர், உறுப்பினர்களின் இத்தகைய செயல்பாடுகள் சட்டமன்றப் பேரவையின் மாண்பையும் அதன் பாரம்பரிய கண்ணியத்தையும் பெருமளவில் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். இந்தியாவிலேயே உள்ள பிற மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் நூற்றாண்டு கால வரலாற்றுப் பெருமையைக் கொண்டதாகவும் விளங்கும் இந்த மாமன்றத்தின் மரபினைக் காக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளாகிய ஒவ்வொரு உறுப்பினரின் கடமை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பேரவையின் செயல்பாடுகள் மற்றும் விவாதங்களை பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் சில நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. எனவே மாண்புமிகு உறுப்பினர்கள் தங்களது பொறுப்பினையும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையினையும் முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் பொதுவெளியில் அவையின் மதிப்பைச் சிதைக்கும் வகையிலான இதுபோன்ற கண்ணியக் குறைவான செயல்களில் இனிவரும் காலங்களில் எக்காரணத்தைக் கொண்டும் ஈடுபடக்கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.
இறுதியாக இந்த எச்சரிக்கையை மீறி அவையின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்து கொண்டால் அந்த செயல் அவையின் உரிமை மீறல் பிரச்சினையாகக் கருதப்படும் என்று சபாநாயகர் குறிப்பிட்டார். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய விதிமுறைகளின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அவர் அவையில் தெளிவுபடுத்தினார். சபாநாயகரின் இந்த கண்டிப்பான உத்தரவு அவையில் இருந்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே பெரும் பரபரப்பையும் அதே வேளையில் விவாதங்களின் போது கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





