சென்னை ,ஜூன் 17 : தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிப் பாதையில் மற்றுமொரு மைல்கல்லாக ,தூத்துக்குடியில் சுமார் 38,000 கோடி ரூபாய் (4 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீட்டில் பிரம்மாண்டமான அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் அமையவுள்ளது. இதன் மூலம் நேரடியாக 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ,தென்கொரியாவின் பிரபல எச்டி ஹுண்டாய் குழுமத்தின் உயர்மட்டக் குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தென்கொரியாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ‘எச்டி கொரியா ஷிப்பில்டிங் அண்ட் ஆஃப்ஷோர் இன்ஜினியரிங்’ (HD KSOE) நிறுவனம் ,உலக அளவில் கப்பல் கட்டுமானத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. தூத்துக்குடியில் சர்வதேசத் தரத்திலான கப்பல் கட்டுமானத் தொகுதி ஒன்றை அமைப்பதற்காக ,இந்த நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.
இந்தச் சூழலில் ,திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்தும் ,அதன் தற்போதைய செயல்பாட்டு நிலைகள் குறித்தும் ஆலோசிப்பதற்காக எச்டி கேஎஸ்ஓஇ நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் தலைமையிலான உயர்மட்ட அலுவலர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். இந்த உயர்மட்டச் சந்திப்பின்போது ,தூத்துக்குடியில் அமையவுள்ள பிரம்மாண்ட கப்பல் கட்டுமானத் தளத்தின் திட்ட வரைவுகள் மற்றும் அதன் முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரிடம் அந்நிறுவன அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் ,தமிழ்நாட்டில் இத்திட்டத்தை மிக விரைவாகச் செயல்படுத்துவதில் தங்களுக்கு இருக்கும் தீராத ஆர்வத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
also : விஜய் ,உதயநிதி ,தமிழிசைக்கு எதிரான தேர்தல் வழக்குகள் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
இந்தியாவின் கப்பல் கட்டுமானத் துறையிலேயே மிக முக்கியத் திட்டமாகப் பார்க்கப்படும் இந்தத் தூத்துக்குடி திட்டத்தின் மூலம் ,நேரடியாக 15,000 பேருக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன. இது தவிர ,கப்பல் கட்டும் தளத்தைச் சார்ந்து உருவாகும் பல்வேறு சிறு மற்றும் குறு துணைத் தொழில்கள் ,உள்ளூர் விநியோகச் சங்கிலி மூலமாக மறைமுகமாக மேலும் பல்லாயிரக்கணக்கானோருக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் ,மாநில அளவில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் பின்னணி மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்காக ,தமிழ்நாட்டின் சிப்காட் (SIPCOT) நிறுவனம் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் (VOCPA) ஆகிய இரண்டும் இணைந்து ‘நேஷனல் ஷிப்பில்டிங் அண்ட் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் பார்க் தமிழ்நாடு லிமிடெட்’ (NSHIPTN) என்ற புதிய கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்த நிறுவனமானது ,தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் தொகுதியை நிறுவுவதற்கான முதல்கட்ட கொள்கை அளவிலான (In-Principle) ஒப்புதலை இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (Directorate General of Shipping) இருந்து ஏற்கனவே பெற்றுள்ளது திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை எளிதாக்கியுள்ளது.
அதிகாரிகளின் விளக்கங்களைக் கேட்டறிந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ,தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இத்திட்டம் மிக முக்கியமானது என்பதால் ,தூத்துக்குடியில் இதனைத் தாமதமின்றி விரைவாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக வசதிகளையும் தமிழ்நாடு அரசு முன்னின்று மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார். மேலும் ,திட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சி ஆவணத்திலும் ,ஒவ்வொரு கட்டத்திலும் அரசின் முழுமையான நிர்வாக ஆதரவும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் இந்தத் துரிதமான ஆதரவை வரவேற்ற எச்டி ஹுண்டாய் நிறுவனத்தினர் ,தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளப் பணிகளை மிக விரைவில் தொடங்குவதற்குரிய அனைத்து இறுதிக்கட்ட முயற்சிகளும் தங்களின் தரப்பிலிருந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த முக்கியச் சந்திப்பின்போது ,தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா ,தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார் ,தொழில் ,முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் ,தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (TIDCO) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் தா. கார்த்திகேயன் ,சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சி.அ. இராமன் ,வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோருடன் எச்டி ஹுண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு குழுத் தலைவர் சன்ஜூன் ஹோங் ,உலகளாவிய வணிகக் குழு மூத்த மேலாளர் ஹோங் சியோல் கிம் ,குழுத் தலைவர் கிவான் லீ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தென் தமிழகத்தின் தொழில் முகம் மற்றும் பொருளாதாரச் சூழலை இந்த 38,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டம் முற்றிலுமாக மாற்றியமைக்கும்








