சென்னை ,ஜூன் 17: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசியல் முக்கியத்துவமிக்க மக்கள் பிரதிநிதிகளின் வேட்புமனுக்கள் மற்றும் சொத்து விவரங்கள் தொடர்பான முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வந்தன. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ,எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூந்திய வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று வெவ்வேறு மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முழுமையாக தள்ளுபடி செய்து இன்று அதிரடி உத்தர பிறப்பித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலின் போது சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் முதலமைச்சர் விஜய் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்கள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த வாக்காளரான விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் முதலமைச்சர் விஜய் தனது சொத்து மதிப்பு 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த மனுவில் 220 கோடியே 15 லட்சம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார். எனவே இந்தச் சொத்து விவரங்கள் உண்மையானவையா மற்றும் முழுமையானவையா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் நீதிமன்றம் உரிய உத்தரவிட வேண்டும் என விக்னேஷ் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
போலி ஆவணம் மூலம் நில உரிமை கோர முடியாது: நெல்லை நீதிமன்றம் அதிரடி
இதேபோன்று தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடந்த தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும் அதற்கு முந்தைய 2021ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது அவர் தாக்கல் செய்திருந்த சொத்து விவரங்களுக்கும் இடையே பெரும் முரண்பாடுகள் நிலவுவதாகக் குற்றம் சாட்டி சேப்பாக்கம் திருவள்ளிக்கேணி தொகுதியைச் சேர்ந்த வாக்காளரான குமரவேல் என்பவர் மற்றொரு வழக்கைத் தொடர்ந்திருந்தார். மேலும் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் வேட்புமனு தாக்கல் மற்றும் அதற்கு எதிரான விவரங்களை அடிப்படையாகக் கொண்டு சென்னை நீதிமன்றத்தில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த மூன்று மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வின் முன்பாக இன்று விரிவான விசாரணைக்கு வந்தன. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜராகி வாதாடிய முதன்மை வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் இந்த வழக்குகள் தொடர்பான முக்கிய சட்ட விளக்கங்களையும் உண்மைத் தரவுகளையும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.
தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தனது வாதத்தில் முதலமைச்சர் விஜய் முதலில் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் இருந்த சில விபரங்களைத் திருத்தம் செய்து அதற்கான புதிய திருத்த மனுவை ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் முறையாகத் தாக்கல் செய்துவிட்டதாகத் தெரிவித்தார். அவர் தற்பொழுது இரு தொகுதிகளிலும் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்புகள் மற்றும் விவரங்கள் சட்டரீதியாகச் சரியாகவே உள்ளன என்றும் இதில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்றும் விளக்கமளித்தார். மேலும் இது போன்ற வேட்புமனு சொத்து விவர முரண்பாடுகள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களாகவோ அல்லது சாதாரண மனுக்களாகவோ விசாரிக்க முடியாது என்றும் இதற்குப் பிரதிநிதிகள் சட்டப்படியான தேர்தல் வழக்குகளை மட்டுமே (Election Petition) தாக்கல் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார். ஏற்கனவே இதே போன்ற கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ள முன்முடிவுகளையும் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் தலைமை நீதிபதி அமர்வின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் வைக்கப்பட்ட இந்த வலுவான சட்ட வாதங்களையும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் ,எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜகா வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய மூவருக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது.
மேலும் இந்த விவகாரத்தில் மனுதாரர்களுக்கு ஏதேனும் முறையான குறைகளோ அல்லது ஆட்சேபனைகளோ நீடிக்கும் பட்சத்தில் அவர்கள் அதனைப் பொதுநல வழக்காகக் கொண்டு வராமல் உரிய சட்ட விதிகளின்படி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் முறையான தேர்தல் வழக்காக (Election Petition) மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதற்கான சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம் என்றும் மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர். இந்தத் தீர்ப்பின் மூலம் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வேட்புமனு சர்ச்சை வழக்குகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தற்பொழுது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.








