Nellai , June 1:நெல்லை பேட்டையில் ஆன்லைன் சேவை மையத்திற்கு வந்த இளம்பெண்ணை ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் 20-க்கும் மேற்பட்ட பெண்களின் ரகசிய வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகரம் பேட்டை ஆர்.பி. சன்னதி தெருவைச் சேர்ந்தவர் கோதர்மைதீன். இவருடைய மகன் முகமது அசரப் அலி (வயது 26). இவர் பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் எதிரே ஆன்லைன் சேவை மையம் மற்றும் ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு நேற்று பேட்டை நாராயணசாமி கோவில் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் தனது அடையாள அட்டை ஒன்றினை ஜெராக்ஸ் எடுப்பதற்காக வந்துள்ளார்.
அப்போது, கடையில் இருந்த முகமது அசரப் அலி, அந்த இளம்பெண்ணுக்குத் தெரியாமல் தனது செல்போன் மூலம் அவரைப் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் அனுமதியின்றி அவரை ஆபாசமான முறையிலும் வீடியோ எடுத்துள்ளார். முகமது அசரப் அலியின் இந்த சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளைக் கவனித்த இளம்பெண், அவர் தன்னை மொபைலில் வீடியோ எடுப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.
Also read : கெட்டுப்போன கேக் விற்ற பிரபல பேக்கரிக்கு ரூ.25,000 அபராதம்: நெல்லை நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தை உலுக்கிய கரூர் கொலை வழக்கு: குவாரி உரிமையாளருக்கு உட்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
உடனடியாகத் தற்காப்பு நடவடிக்கையாக அந்தப் பெண், தனது கணவருக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். அங்கு விரைந்து வந்த இளம்பெண்ணின் கணவர், இதுகுறித்து முகமது அசரப் அலியிடம் நேரில் விபரம் கேட்டு தட்டிக்கேட்டுள்ளார். நிலைமை மோசமாவதை உணர்ந்த அசரப் அலி, அங்கிருந்து தப்பியோடினார்.
அவர் அவசரமாகத் தப்பியோடியதில், அவருடைய செல்போன் மட்டும் அந்த இளம்பெண்ணின் கணவர் கையில் சிக்கியது. இதையடுத்து, அந்த செல்போனை ஆதாரமாக எடுத்துக்கொண்டு தம்பதியினர் பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று, நடந்த விபரங்களைக் கூறி புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் பேட்டை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
முதற்கட்டமாக, தப்பியோடிய முகமது அசரப் அலியின் செல்போனை போலீசார் திறந்து சோதனை செய்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அந்த போனில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீடியோ மட்டுமின்றி, அந்தப் பகுதிக்கு வந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசமான ரகசிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவாகி இருந்தது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அசரப் அலியின் கடைக்கு எதிரே பேருந்து நிறுத்தம் ஒன்று அமைந்துள்ளது தெரியவந்தது. அங்கு வந்து பேருந்துக்காகக் காத்திருக்கும் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை, முகமது அசரப் அலி தனது கடையில் இருந்தவாறே தொலைவில் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகப் படம் பிடித்து அதனை ரசித்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.
இதனையடுத்து, பிறர் அறியாமல் ஒருவரின் அந்தரங்கத்தைப் படம் பிடிப்பது மற்றும் பார்ப்பது தொடர்பான புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 77-ன் கீழ் (Bharatiya Nyaya Sanhita – BNS) பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த முகமது அசரப் அலியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ், இந்த வழக்கிற்காகத் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் வேல்சவுத்ரி தலைமையிலான குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த முகமது அசரப் அலியைத் தனிப்படையினர் இன்று காலை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நெல்லை பேட்டை பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







