திருத்திப்பட்டி கண்மாயில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்: சரணாலயமாக அறிவிக்கக் கோரி சிவகங்கை மக்கள் மனு

சிவகங்கை , ஜூன் 19 : சிவகங்கை மாவட்டத்தில் கோடை காலத்திலும் வற்றாத நீர்நிலையாக விளங்கும் திருத்திப்பட்டி கண்மாய்க்கு கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வலசை வந்து குவிந்து வருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த நீர்நிலைப் பகுதியை முறையான பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே தற்பொழுது தீவிரமடைந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலகப் புகழ்பெற்ற வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்புவது வழக்கம். இந்த நிலையில் வேட்டங்குடிக்கு இணையாக சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள திருத்திப்பட்டி கண்மாயிலும் கடந்த பல ஆண்டுகளாகப் பறவைகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. பொதுவாகக் கோடை காலங்களில் பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டுவிடும் சூழலில் இக்கண்மாயில் தற்போதும் தண்ணீர் வற்றாமல் நிறைந்து காணப்படுவதால் பல்வேறு அரிய வகை பறவைகள் தங்களது வாழ்விடமாக இதைப் பயன்படுத்தி வருகின்றன.

திருப்புவனத்தில் ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு: போலீஸ் தேர்வெழுதி காத்திருந்த சோகம்

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள்: 17 பேர் அதிரடி கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சர்வதேச எல்லைகளைக் கடந்தும் வரும் வண்ணத்துப் பறவைகளைக் காண்பதற்காகத் தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் இயற்கை ஆர்வலர்களும் திருத்திப்பட்டிக்கு வந்து செல்கின்றனர். இந்தச் சூழலில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாலாஜி அண்மையில் இக்கண்மாய்க்கு நேரில் வருகை தந்து, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பறவைகளைக் கண்டு ரசித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வனத்துறை உயர் அதிகாரிகளும் அவருடன் உடனிருந்து கண்மாயின் சூழல் குறித்து விளக்கினர். உயர் நீதிமன்ற நீதிபதியின் இந்த வருகை இப்பகுதியைச் சரணாலயமாக மாற்றக் கோரும் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திருத்திப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அருள்ராஜ் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த கலாமேரி ஆகியோர் கூறுகையில் தங்களது ஊர்க் கண்மாய்க்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோடை காலங்களில் வெளிநாட்டு மற்றும் வெளிமாநிலப் பறவைகள் பெருமளவில் வந்து தங்கிச் செல்வதாகத் தெரிவித்தனர். இதனை முறையான பறவைகள் சரணாலயமாக அரசு அறிவிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிராம மக்களின் விருப்பமாக உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் சருகணியாற்றிலிருந்து இந்த திருத்திப்பட்டி கண்மாய்க்குத் தண்ணீர் கொண்டு வரும் பிரதான வரத்துக்கால்வாயைத் தூர்வாரிச் சீரமைத்தால் கண்மாய்க்கான நீர்வரத்து இன்னும் அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் பறவைகளின் வருகை மேலும் உயரும் என்றும் கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பறவைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கண்மாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டுவதற்குக் கடுமையான தடை விதிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். அத்துடன் இப்பகுதிக்கு வரும் பறவைகளை வேட்டையாடுவதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் பறவைகளின் முக்கிய வாழ்வாதாரமாகவும் இரையாகவும் விளங்கும் கண்மாய் மீன்களை வணிக நோக்கில் ஏலம் விடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த வாழ்விடப் பாதுகாப்பு நடைமுறைகளைச் சாத்தியப்படுத்தக் கோரி வனம், சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர்களுக்கும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அலுவலருக்கும் கிராம மக்கள் சார்பில் விரிவான கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பொதுமக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கை மற்றும் தற்போதைய சூழல் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது திருத்திப்பட்டி கண்மாய்க்கு எந்தெந்த நாடுகளிலிருந்து, என்னென்ன வகையான அரிய பறவைகள் வருகின்றன என்பது குறித்துத் தொடர்ந்து அறிவியல் பூர்வமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தனர். மேலும் பறவைகள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பதற்கான தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கண்மாயின் ஒட்டுமொத்த சூழலையும் முழுமையாக ஆராய்ந்து ஆவணப்படுத்திய பின்னரே இப்பகுதியைச் சரணாலயமாக அறிவிப்பது தொடர்பான விரிவான அறிக்கை தமிழக அரசுக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படும் என்றும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *