2028 ஒலிம்பிக் போட்டிக்கான தமிழக வீரர்களைத் தேர்வு செய்ய ‘திறனாய்வுக் குழு’ அமைப்பு — விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

image 470

சென்னை,மே 22 : அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2028-ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்றுப் பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு, தகுதியான வீரர்களைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சிகள் வழங்கத் தமிழக அரசு புதிய தொலைநோக்குச் செயல்திட்டங்களை வகுத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும் அறியப்படாமல் முடங்கிக்கிடக்கும் திறமையான இளம் வீரர்களைக் கண்டறிவதற்கெனப் புதிய ‘திறனாய்வுக் குழு’ அமைக்கப்படும் என்றும், தமிழக விளையாட்டுச் சங்கங்களை ஒருங்கிணைக்க விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் தனி ‘ஒருங்கிணைப்பு அலுவலர்’ நியமிக்கப்படுவார் என்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று (மே 22) தமிழகத்திலுள்ள அனைத்து விளையாட்டுச் சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக விளையாட்டுத் துறையின் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

also read : சிவகங்கை மாவட்டத்தில் இரவு பகலாக இயங்கும் கிரவல் குவாரி நடவடிக்கை கோரி ஐந்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்…

போதைக்கு எதிராக விளையாட்டு : இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், “இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்தில் தமிழக முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அவர்களைச் சர்வதேசச் சாதனையாளர்களாக மாற்றுவதற்கான தொலைநோக்குச் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் இளைஞர்களைப் போதைப்பொருள் பழக்கவழக்கங்களிலிருந்து நல்வழிப்படுத்தி, அவர்களின் ஆற்றலைச் சரியான பாதையில் திருப்புவதற்கு விளையாட்டுத் துறைக்கு அரசு பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “விளையாட்டுத் துறை, விளையாட்டுச் சங்க நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் ஆகிய மூவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விரைவில் எட்ட முடியும். இதற்காக, விளையாட்டுத் துறை தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து எவ்வித சிரமமுமின்றி என்னை நேரில் சந்திக்கலாம். இதற்கென நாள்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நான் பொதுமக்களைச் சந்திக்கத் தயாராக உள்ளேன்” என்றும் அவர் கூறினார்.

ஒலிம்பிக் பவன் மற்றும் புதிய உள்கட்டமைப்புகள் : விளையாட்டுச் சங்கங்களின் நீண்டகாலக் கோரிக்கையான ‘ஒலிம்பிக் பவன்’ வளாகம் குறித்துப் பேசிய அமைச்சர், அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் அதற்கான கட்டுமானப் பணிகளை முழுமையாக முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றார்.

முன்னாள் விளையாட்டு வீரரான தனக்கு விளையாட்டுத் துறையின் தேவைகளும், சங்கங்களின் செயல்பாடுகளும் நெருக்கமாகத் தெரியும் எனக் குறிப்பிட்ட அவர், உலக அரங்கில் தமிழக வீரர்களை வெற்றியாளர்களாக நிறுத்த அதிகாரத்துவ நிர்வாகமும் விளையாட்டுச் சங்கங்களும் கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்நாட்டில் அதிக அளவில் நடத்துவதற்கான உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரும் வீரர்களுக்கு உலகத் தரத்திலான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீராங்கனைகளுக்கு விமானப் பயணத்தில் முன்னுரிமை:- தமிழகத்தில் விளையாட்டுத் திறனை அடித்தட்டு அளவில் மேம்படுத்த ‘மினி ஒலிம்பிக்’ போட்டிகள் நடத்தப்படும் என்றும், பெண்களை விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்கச் செய்வதற்கான சிறப்பு ஊக்கத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்திலிருந்து தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வதற்காக மிக நீண்ட தூரம் பயணிக்கும் வீரர்களின் உடல்நலன் மற்றும் வெற்றி வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, அவர்கள் இனி வரும் காலங்களில் போட்டிகளுக்குச் சென்று வர விமானப் பயண வசதிகள் செய்து தரப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டார்.

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கங்களை வெல்லத் தொடங்கும்போது, அது ஒட்டுமொத்த மாநிலத்திலும் விளையாட்டின் மீதான ஆர்வத்தைப் பல மடங்கு அதிகரிக்கும் என்றும், இது தமிழக விளையாட்டு வரலாற்றின் புதிய தொடக்கமாக அமையும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இப்பரபரப்பான ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசுச் செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மரு. ரா. சுமன், பொது மேலாளர் எல். சுஜாதா மற்றும் தமிழகத்தின் பல்வேறு விளையாட்டுச் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Press Release : https://dipr.tn.gov.in/dipr_api/v1/uploads/tn_govt_press_release/DIPR_-P.R.NO.061-_Hon_ble_Public_Works_and_Sports_Development_Minister_Press_Release_and__Photo_from_DIPR-Date.22.05.2026.docx.pdf

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 983

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »