சென்னை, மே 30: மின்சார வாரியத்தின் டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், விரிவான ஆய்வுகளுக்கு பின்னரே புதிய டெண்டர் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று மின்சாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கென மூன்று சிறப்பு குழுக்களை அமைத்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அண்மையில் சென்னையில் மின்சாரத்துறை ஸ்டேக்ஹோல்டர் யூனியனின் (Stakeholder Union) ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக எரிசக்தி துறை அமைச்சர் நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மேடையிலேயே அமைச்சரிடம் நேரடியாகப் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் முன்வைத்தனர். கடந்த கால ஆட்சிகளில் டெண்டர்கள் ஒதுக்கீடு செய்வதிலும், திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் முறையற்ற கமிஷன் கலாசாரம் பரவலாக இருந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாகவே, பொதுமக்களுக்கு உரிய முறையில் தரமான மின்சாரத்தை விநியோகம் செய்ய முடியாமல் போனதாகவும், ஒப்பந்ததாரர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
ஒப்பந்ததாரர்களின் இந்தப் புகார்களைக் கேட்டறிந்த அமைச்சர் நிர்மல் குமார், இந்த விவகாரத்தில் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மேடையிலேயே மின்வாரிய ஒப்பந்ததாரர்களுக்குப் பகிரங்கமாக உறுதி அளித்தார்.
Also read : ₹20,000 கோடி ஊழல் குற்றச்சாட்டு: வணிக வாகன ஸ்டிக்கர், GPS கொள்முதல் விவகாரத்தில் பரபரப்பு!
இந்த நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் மின்சாரத்துறையின் உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தின் கொள்முதல் மற்றும் ஒப்பந்த நடைமுறைகளில் நூறு சதவீத வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டுவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, டெண்டர் கோருவதற்கு முன்பாகவே தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது இந்த மூன்று சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மின்சாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சந்தை பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு சரிபார்ப்பு குழு (Market Analysis and Estimation Validation Committee), உற்பத்தியாளர் மதிப்பீட்டுக் குழு (Manufacturer Assessment Committee) மற்றும் சரிபார்ப்புக் குழு (Check Committee) ஆகிய மூன்று கமிட்டிகள் உருவாக்கப்பட்டு, அவற்றுக்கான பிரத்யேகப் பணிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.
இதில், மார்க்கெட் அனாலிசிஸ் கமிட்டி மற்றும் மேனுபேக்சரர் அசஸ்மென்ட் கமிட்டி ஆகிய இரு குழுக்களும் தங்களின் விரிவான ஆய்வு அறிக்கைகளை 15 நாட்களுக்குள்ளாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, செக் கமிட்டி தனது சரிபார்ப்பு அறிக்கையை 7 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகள் அனைத்தையும் மிக அவசரமானதாகக் கருதி, எவ்வித தொய்வுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சகம் தனது சுற்றறிக்கையில் மின்வாரிய அதிகாரிகளுக்குக் கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மின்வாரிய டெண்டர்களில் நம்பகத்தன்மையை அதிகரிக்க அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








