நெல்லை , ஜூன் 22: கோயம்புத்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்தில், நள்ளிரவில் பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயது நபரை நெல்லை மாநகரப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நடப்பு பருவத் தேர்வுகள் நிறைவடைந்ததை அடுத்து நெல்லையில் உள்ள தனது பெற்றோரைக் காண்பதற்காக அவர் நேற்று முன்தினம் இரவு கோயம்புத்தூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார்.
பேருந்து நள்ளிரவு சுமார் இரண்டு மணி அளவில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கடந்து கொண்டிருந்தபோது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற 58 வயது நபர் பேருந்தில் ஏறியுள்ளார். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு கூலி வேலை செய்து வரும் இவருக்குத் திருமணமாகி திருமண வயதில் பிள்ளைகள் உள்ளனர்.
பேருந்தில் மாணவியின் இருக்கைக்குப் பின்புறம் அமர்ந்த சுரேஷ், நள்ளிரவு நேரத்தில் மாணவி தனியாகப் பயணம் செய்வதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவருக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்துள்ளார். மேலும் அந்த மாணவியை மிரட்டி அவரது அலைபேசி எண்ணைத் தருமாறு கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நள்ளிரவுப் பயணத்தில் நிலைதடுமாறிய மாணவி பயத்திலும் அதிர்ச்சியிலும் யாரிடமும் சொல்ல முடியாமல் உறைந்து போயுள்ளார்.
அதிகாலை வேளையில் தனியார் பேருந்து நெல்லை புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. பேருந்து நின்றதும் பயந்துபோன மாணவி உடனடியாகத் தனது இருக்கையை விட்டு கீழே இறங்கினார். எனினும் அந்த நபர் மாணவியைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து பேருந்து நிலையப் பகுதியிலும் மிரட்டல் விடுத்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அந்நேரத்தில் நெல்லை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அதிகாலை நேரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரைக் கண்ட மாணவி அவர்களிடம் ஓடிச் சென்று தனக்கு நேர்ந்த துயரத்தைக் கூறி அழுதுள்ளார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மாணவி காட்டிய அடையாளத்தை வைத்து அவரைப் பின்தொடர்ந்து வந்த சுரேஷை அந்த இடத்திலேயே மடக்கிப் பிடித்தனர்.
தொடர்ந்து அவரை மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பேருந்துப் பயணத்தின் போது மாணவிக்கு அவர் பாலியல் ரீதியான அத்துமீறல்களைக் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷைக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுப் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.





