ஜூன் 24: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அண்மையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு அங்கு தற்காலிகமாக அமைதியான சூழல் திரும்பியிருப்பது போல் தோன்றினாலும் இந்தியர்கள் அந்நாட்டிற்கு தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் புதிய பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் இந்திய தூதரகம் சார்பில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த புதுப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக அங்கு பதற்றம் சற்று தணிந்திருப்பதாகக் கருதி பல இந்தியர்கள் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடக்கூடும் என்பதால் தூதரகம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்திய விமானப்படையில் இணையும் முதல் உள்நாட்டு C295 விமானம்!
ஈரான் நாட்டிற்கு தற்போதைய சூழலில் பயணம் மேற்கொள்ள விரும்புகின்ற இந்தியர்கள் அது தேவையற்ற அல்லது தவிர்க்கக்கூடிய பயணமாக இருந்தால் அதனை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்று டெஹ்ரான் தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தவிர்க்க முடியாத காரணங்களால் அவசியமாக ஈரான் நாட்டிற்குச் சென்றே ஆக வேண்டும் என்கிற சூழலில் உள்ளவர்களும் ஏற்கனவே அங்கு வசித்து வரும் இந்தியர்களும் உச்சபட்ச விழிப்போடும் கூடுதல் கவனத்தோடும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது அங்கு பாதுகாப்பு சூழல் ஓரளவிற்கு மேம்பட்டிருப்பது போல் தென்பட்டாலும் எந்த நேரத்திலும் நிலைமை மாறலாம் என்பதால் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள் மற்றும் அவசரத் தேவைக்காக அங்கு புதிதாகச் செல்லும் இந்தியர்கள் அனைவரும் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களை உடனே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் தங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் என்ன நடக்கிறது என்பது குறித்து எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும், ஈரானின் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் அவ்வப்போது வழங்கும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகவும் கட்டாயமாகவும் பின்பற்ற வேண்டும் என்றும் இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.





