திருவள்ளூர் ,ஜூன் 21: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு காரணமாக இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்டோர் சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தைத் தொடர்ந்து தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 142 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகிலுள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 50-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் ஜார்க்கண்ட், அசாம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்து தங்கிப் பணிபுரிந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. தற்பொழுது தற்காலிக முகாமில் உள்ள தொழிலாளர்களுக்குக் கண் எரிச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் அல்லது மயக்கம் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவக் குழுவினரால் முதற்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
also : பெரியபாளையம் அருகே அமோனியா கசிவு: காற்றில் நச்சு கலந்ததா ? என மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு
இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் சிலர் தோற்றத்தில் சிறுவர்களைப் போலக் காணப்படுவதால் அங்குப் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் நல அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தொழிலாளர்களின் வயது மற்றும் அடையாள ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்ட வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து இந்த விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
மாநிலம் கடந்த தொழிலாளர்கள் என்பதால் அவர்களிடம் தடையின்றிப் பேசி விவரங்களைச் சேகரிக்க இந்தி பேசத் தெரிந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்காலிக முகாமில் உள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்களது சொந்த ஊர்களில் உள்ள குடும்பத்தினருக்குத் தெரிவிப்பதற்கான தகுந்த ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த இரு பெண் தொழிலாளர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்கும் அவர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்வதற்கும் ஏதுவாக முகாமில் உள்ள சக ஊழியர்களிடம் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





