திருவள்ளூர் , ஜூன் 21: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கடல் உணவு மற்றும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று மதியம் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழுக்கும் மேற்பட்டோர் நச்சு வாயுவை சுவாசித்ததால் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் விபத்து நடந்த தொழிற்சாலையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நச்சு வாயுவின் தாக்கம் குறித்து அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மருத்துவத்துறை, தொழிலாளர் நலத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விபத்து நடந்த தொழிற்சாலையின் உள் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் அமோனியா வாயு எந்த அளவிற்கு காற்றில் கலந்திருக்கிறது என்பதைக் கண்டறிவதே தற்போதைய முதன்மைக் குறிக்கோளாக உள்ளது.
பாளையங்கோட்டை அடுத்த கே.டி.சி. நகரில் கஞ்சா விற்ற மதுரை வாலிபர்கள் இருவர் கைது
இதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்குச் சொந்தமான அதிநவீன நடமாடும் காற்று தரக் கண்காணிப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வாகனத்தில் உள்ள கருவிகள் மூலம் தொழிற்சாலையின் உள்ளே இருக்கும் காற்றின் தரம் மட்டுமன்றி தொழிற்சாலையைச் சுற்றியுள்ள சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவிலான வான்வெளியில் பரவியுள்ள காற்றின் தன்மையும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. காற்றில் அமோனியா வாயுவின் அடர்த்தி எந்த அளவில் உள்ளது, அது பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா மற்றும் வேறு ஏதேனும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் காற்றில் கலந்துள்ளனவா என்பது குறித்து இந்த வாகனத்தின் மூலம் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது காற்றில் ஏற்பட்டுள்ள மாசுபாட்டின் துல்லியமான அளவைக் கண்டறிந்து அதற்கேற்ப அடுத்தகட்ட முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இந்தத் தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். மேலும் இந்த அதிநவீன வாகனத்தின் மூலம் சேகரிக்கப்படும் தரவுகளின் அடிப்படையில் காற்றில் கலந்துள்ள நச்சுத்தன்மை குறித்த விரிவான அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது அந்தப் பகுதி முழுவதும் அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.





