திருநெல்வேலி , May 28 : நெல்லை நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் காவலில் இருந்த நகைப் பறிப்பு வழக்கு கைதிக்கு, ரகசியமாக கஞ்சா பொட்டலம் சப்ளை செய்ய முயன்ற அவரது கூட்டாளியைப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். நீதிமன்ற வளாகத்திலேயே அரங்கேறிய இந்த துணிச்சலான சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு நெல்லை டவுன் பகுதியில் நடைபெற்ற கோவில் கொடை விழா ஒன்றில் பங்கேற்பதற்காக, ஈரோட்டைச் சேர்ந்த கற்பகவள்ளி என்பவர் தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பினர். இந்த துணிகரக் கொள்ளை குறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், இந்த நகைப் பறிப்புச் சம்பவத்தில் அய்யப்பன் மற்றும் விக்கி என்ற விக்னேஷ் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், நெல்லை சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மற்றொரு குற்ற வழக்கிலும் இந்த இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, அந்த வழக்கிலும் இவர்கள் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணை கைதிகளாக இருந்து வருகின்றனர்.
also read : நெல்லை மேலப்பாளையத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகை
நாங்குநேரி அருகே 49 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது
இந்த நிலையில், நகை பறிப்பு உள்ளிட்ட இரண்டு வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக, பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து அய்யப்பன் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை நீதிமன்றத்திற்குப் போலீசார் அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் இருவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவடைந்ததை அடுத்து, மேற்கொண்டு சிறைக்கு அழைத்துச் செல்வதற்காகக் கைதிகள் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற அரங்குக்கு வெளியே காத்திருந்தனர்.
அப்போது, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த வாலிபர் ஒருவர், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரின் கண்ணில் படாமல் கைதி அய்யப்பனை நெருங்கிப் பேசத் தொடங்கினார். விசாரணையில் அவர் மூன்றடைப்பு அருகே உள்ள அ.சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் என்பது தெரியவந்தது. கைதி அய்யப்பனும் சண்முகவேலும் நீண்ட நேரமாக ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, சண்முகவேல் தனது சட்டப் பையிலிருந்து சிறிய கருப்பு நிற பொட்டலம் ஒன்றை எடுத்து, யாருக்கும் தெரியாதவாறு அய்யப்பனிடம் ரகசியமாகக் கொடுத்தார். அதனைப் பெற்றுக்கொண்ட அய்யப்பன், உடனடியாகத் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் மறைத்து வைக்க முயன்றார். கைதிகளின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த பாதுகாப்புப் படை போலீசார், இவர்களது ரகசியப் பரிமாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாகப் பாய்ந்து சென்று அய்யப்பனின் கையில் இருந்த அந்த கருப்பு நிற பொட்டலத்தைப் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, பிடிபட்ட சண்முகவேலையும் கைதி அய்யப்பனையும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டின் முன்னிலையிலேயே அந்த கருப்பு நிற பொட்டலம் பிரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதில் விற்பனைக்காகச் சிறு சிறு பொட்டலங்களாக அடைக்கப்படும் சுமார் 5 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது உறுதி செய்யப்பட்டது. கைதிக்கு நீதிமன்ற வளாகத்திலேயே கஞ்சா சப்ளை செய்ய முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாஜிஸ்திரேட்டு, குற்றவாளி மீது உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு வாய்மொழியாக உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சண்முகவேலை மீட்ட போலீசார் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கும், பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கும் முறைப்படி தகவல் தெரிவித்தனர். நீதிமன்ற வளாகத்திற்குள் கஞ்சா கடத்தி வந்து கைதிக்குக் கொடுக்க முயன்ற குற்றத்திற்காகச் சண்முகவேல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதிகளுக்குச் சிறைக்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்துவதைத் தடுக்கப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற விசாரணையின் போதே கூட்டாளிகள் மூலமாகக் கஞ்சா சப்ளை செய்ய முயன்ற இச்சம்பவம், நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசாரிடையே கூடுதல் விழிப்புணர்வின் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.













